பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருவள்ளுவர் - சமயவியல்
(இரண்டாம் நாள் சொற்பொழிவு)

முன்னுரை

திருக்குறள் ஓர் அறிவு நூல்; திருக்குறள் ஓர் அற நூல்; அறத்திலும் சிறந்து விளங்கும் ஞானத்தை - பேரறிவை வழங்கும் ஞானப் பனுவல், திருக்குறள், மெய்யுணர்வில் திளைத்த அருள்ஞானச் செல்வராகிய திருவள்ளுவர் தந்தது. திருக்குறளைப் பிற்காலத்தவர்கள் வடமொழி நான்மறை யோடு ஒத்தது என்பர். இல்லை, இல்லவே இல்லை! சிறு தெய்வங்களையும், இயற்கை ஐம்பூதங்களையும் அஞ்சித் தொழும் நெறிகளைக் கூறுவன அந்நான்மறைகள். ஆனால், அச்சமின்றிப் பரம்பொருளைத் தொழும் ஞானநெறியைக் காட்டியது, காட்டுவது திருக்குறள். திருக்குறள், சமயச் சான்றோர்களால், ஞானிகளால் ஏற்றுப் போற்றப் பெற்றிருப்பதனாலேயே அதனுடைய அருமை விளங்குகிறது. உமாபதி சிவம், திருக்குறளை உளங்குளிரப் பாராட்டுகின்றார்.

"—... நிலைத்தமிழின்
தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த
மெய்வைத்த சொல்” (நெஞ்கவிடு தூது, 25-26)

என்று கூறியிருப்பதறிக. "இவ்வளவு உயர்ந்த ஞானத்தைச் சிறந்த முறையில் கூறும் திருக்குறள் போன்ற அறநெறிக் கோவை உலக இலக்கியங்களிலேயே வேறு இல்லை" (சர் ஆல்பெர்ட் சுவைட்சர் - இந்திய நாட்டின் சிந்தனையும்