பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 141


மானுடச் சாதிக்குப் பயன்தாராது. அச்சம் கொச்சைத் தனமானது; கீழ்மையானது; ஆக்கத்தின் வழி நடத்தாது. அதனாலன்றோ வள்ளுவம்,

"அச்சமே கீழ்களது ஆசாரம்" - (1075)

என்று அச்சத்தை இழித்துப் பேசுகிறது. சமய வாழ்க்கையில் மேம்பட்டு விளங்கிய ஞானிகள் "அஞ்சுவது யாதொன்று மில்லை; அஞ்ச வருவதுமில்லை" என்று உரைத்த உயர் ஞானமொழி உணரத்தக்கது. தேசியக் கவிஞனாகவும் சமய வாழ்க்கையுடையவனாகவும் விளங்கிய பாரதி "அச்சமில்லை அச்சமில்லை அச்ச மென்பதில்லையே” என்று பாடியதையும் அறிக. ஆதலால் அச்சம், அறிவியல் முயற்சிக்கு முரணானது: ஆக்கத்திற்கு மாறுபட்டது; அன்பு நெறிக்கு இசைவிலாதது; அருளியலுக்கு உடன்பாடிலாதது. எனவே அச்சத்தில் பயத்தில் சமயம் தோன்றாது; தோன்றமுடியாது; தோன்றக் கூடாது. அச்சத்தின் வழிப்பட்ட சமயங்கள் ஆனவை மானிடச் சாதியை அடிமையாக்கும்; குற்றவாளிகளாக்கும்; பிச்சைக்காரர்களாக்கும்; காலப்போக்கில் அழித்துவிடும். அப்படியானால் அப்பரடிகள்,

"அஞ்சியாயினும் அன்புபட்டாயினும்
நெஞ்சம்வாழி நிலைநின்றி யூரை நீ"

(திருவொற்றியூர்த் தேவாரம், 10)

என்று அருளிச் செய்துள்ளாரே என்ற வினா எழும். அது, அவர் காலத்தில் வந்த வழக்கினைச் சார்ந்த நிலை. அப்பரடிகள் உலகு தழுவிய சிந்தனையுடையவர். ஆதலால், தம் காலத்தில் வழக்கில் இருந்த செய்திகள் சிலவற்றைத் தம் பாடல் வழி நினைவு கூர்கிறார் அஃது ஒரு நினைவு கூர்தல் என்ற அளவிலேயே அமையும்.

"ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்"
என்றும்