பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"வடமொழியும் தென்தமிழும் ஆனான் கண்டாய்"

என்றும் அருளிச் செய்துள்ளமையால் அவர் காலத்தில் நிலவியவற்றையும் எடுத்து இயம்பித் தம் நிலையில் நின்றார் என்பதே கருத்து. அது மட்டுமன்று. அஞ்சுதல். அன்பு எனும் இவையிரண்டும் இருவேறு இயல்பின என்பதையும் அவர் உணர்த்தாது உணர்த்துகிறார். மேலும் அஞ்சியாயினும் என்பதற்கு அச்சத்தினாலாயினும் என்று பொருளே தவிர, அஞ்சி வழிபடுதலை முழுமையாக ஏற்றுக்கொண்டார் என்பது பொருளாகாது. அவருக்கு உண்மையான நோக்கம் அன்பினால் வழிபாடு நிகழ்த்துதல் என்பதேயாம். திருக்குறள் தோன்றிய தமிழினத்தின் சமயம், அறிவு ஆற்றல்களின் எல்லையைக் காணும் ஆர்வத்தில் பிறந்ததேயாம். இயல்பின் மனித அறிவு, எல்லைகளுக்கு உட்பட்ட அறிவாக விளங்குகிறது. ஆற்றலும் அப்படித்தான்! ஒரு மாபெரும் செயலைச் செய்து முடிக்க விரும்புபவர் தமது அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள ஆர்வம் உடையரா யிருத்தல் இயற்கை. நெடுந்துாரம் கடக்க வேண்டியவர் விரைந்து செல்லும் பயண ஊர்திகளையும், நெடுந்தொலைவு காண விரும்புபவர் ஆற்றல்மிக்க தொலைநோக்கியையும் பயன்படுத்துவதைக் கண்கூடாகக் காண்கிறோம். அதுபோல உயிரின் அறிவை ஆற்றலைப் பெருக்கி வளர்த்துக்கொள்ள வேண்டும்; அதற்குப் பேரறிவாளனாக - வரம்பிலாற்றல் உடையானாக விளங்கும் இறைவனை நாடவேண்டும் என்கிற மனப்போக்கிலேயே உயர்சமயம் தோன்றியது. பிறிதொரு களமும் உண்டு. உயிர்கள் துய்த்து மகிழ்ந்து இன்புற்று வாழ எத்தனையோ கோடி இன்பங்கள் இந்த உலகத்தில் உள்ளன. அவைகளைக் கூர்ந்து நோக்குங்கால் மனித ஆற்றலை விஞ்சிய ஆற்றலின் தொழிற்பாடு தெரிகிறது.

"கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பு"


(திருமுரு 1 : 17)