பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 143


என்பார் நக்கீரர். இவ்வின்பத்தையெல்லாம் துய்த்து மகிழும் உயிர், நன்றிப் பெருக்கோடு அந்த ஒப்பரிய பேராற்றலை வாழ்த்த முனைவதும் ஒரு காரணம். இவைதாம், தொன்மைக் காலத்தில் தமிழ்ச்சமயம் தோன்றுவதற்கமைந்த களங்கள். காலப்போக்கில் மனித குலத்தில் பொதுமையும் சான்றாண்மையும் குறையக் குறையப் பொய்யும் வழுவும் வந்தமைய, அறத்தை வற்புறுத்தவும், நீதியை நிலைநாட்டவும் சட்டங்கள் தோன்றுவதற்கு முன்பு, இம்மை மறுமை நலன்களைக் காட்டித் தடம் பிறழ்ந்த மனித சமுதாயத்தை நன்னெறியில் நிறுத்தச் சமயநெறிகள் முயன்றன. அப்போது சமயத்தின் தோற்றக்களன் விரிந்து, ஆட்சி முறையினைத் தழுவித் தேவைக்கேற்பப் புனைந்துரைகளை நாடியது. இப்படி விரிந்தமையினால் சமயவுலகு நன்மைகளும் பெற்றது; தீமைகளும் பெற்றது. சமயத் துறையின் நிலையியலுக்கு எடுத்துக் கொண்ட விரிவை, மருந்தாகப் பயன்படுத்தாமல் உணவாகப் பயன்ப்டுத்தியதால் சில தீய விளைவுகளும் தோன்றின. அதனால் "மனித உலகத்தின் முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டை" - "சமயம் முட்டுக்கட்டை", "சமயம் மக்களுக்கு அபின்" என்றெல்லாம் எடுத்து விளக்கக்கூடிய அளவுக்குச் சமயநெறியினைச் சார்ந்த நிறுவனங்கள் முறைபிறழ்வில் நெடியதூரம் சென்றுவிட்டன என்பதை மறுப்பதற்கில்லை; மறுக்கவும் இயலாது. ஆக, சமயத் தோற்றத்திற்குக் காரணம் அறிவின் வேட்கையேயாம்; ஆற்றலின் பாற்பட்ட நாட்டமேயாம். அமைதியை நாடும் இன்ப அன்பினைத் தழுவும் பேரார்வமே, சமய நெறியின் தோற்றத்திற்கு ஊற்றுக் கண்.

மதம் - சமயம் ஆகிய சொற்கள் ஒரு பொருள் உடையன போல வழங்கப் பெறுகின்றன. ஆனாலும் "மதத்திற்கும் சமயத்திற்கும் வேறுபாடு உண்டு. மதம்' என்பது,