பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"எழுவகை மதமே உடன்படல் மறுத்தல் பிறர்தம் மதமேல் கொண்டு களைவே
தாஅ னாட்டித் தனது நிறுப்பே
இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே
பிறர்நூற் குற்றம் காட்டல் ஏனைப்
பிறிதொடு படாஅன் தன்மதம் கொளலே”

(நன்னூல் பொதுப்பாயிரம் : 1)


என்று வகைப்படுத்தப் பெறுகிறது. இங்கு மதம் என்ற சொல்லுக்குக் கொள்கை என்பதே பொருள். இந்நூற் பாவில் வரும் மதம் என்ற சொல் உணர்த்திய பொருளோடு கடவுள் தொடர்பு இல்லை. அஃதொரு கருத்தினை, கொள்கையினைக் குறிக்கும் சொல்லாகத் தானிருக்கிறது. இஃது உணரத்தக்கது. பின், ஒரு கொள்கையுடையார் பிறிதொரு கொள்கையுடையார் மீது கொள்கையைத் திணிக்கக் கடவுட் கொள்கையையும் சேர்த்துப் பயன்படுத்தி யிருப்பார்கள் போலும்! அப்பொழுது மதம் என்ற கொள்கை அமைப்போடு கடவுள் சம்பந்தப்பட்டது. கொள்கை வெறியில் கொள்கையின் தராதரத்தை ஆராய்ந்தறியாமல் கொள்கையைத் திணித்து விடவேண்டும் என்று வெறிபிடித்து அலையும் பெரியவர்களுக்கு "மதம் என்னும் பேய் பிடியா திருக்க வேண்டும்" என்று தன்மீது வைத்து வள்ளலார் அறிவுறுத்துகிறார். தமிழ் இன வாழ்க்கையில் சமயம், முன்னர்க் குறிப்பிட்டதைப்போல வாழ்க்கை செப்பமாக அமைய, குறைகளை நிறைகளாக மாற்றிக்கொள்ளத் தோன்றியதேயாம். மதம் என்ற சொல்லுக்கும் சமயம் என்ற சொல்லுக்கும் உணர்வில், பொருள் விளக்கத்தில் நடைமுறையில் நிறைந்த வேறுபாடுண்டு. இன்று நாம் விரும்புவது மதமன்று, சமயமேயாம்.

வாழ்க்கை அருமையானது; பெருமைக்குரியது. என்றால் எந்த வாழ்க்கை: இன்று பலர் வாழவே இல்லையே! ஏன்? அவர்களுக்கு வாழத் தெரியாதே! அது மட்டுமா?