பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13


"உழவன் உழவு செய்யும் இடத்திலே, சாலை அமைக்கத் தொழிலாளி கல்லுடைக்கும் இடத்திலே இறைவன் இருக்கிறான். அவர்களுடன் வெயிலிலும் மழையிலும் காய்கிறான். நனைகிறான். அவன் ஆடையில் தூசி படர்ந்திருக்கிறது. இறைவன் அங்கேயிருக்க, தாளிட்ட அடைபட்ட கோயிலில் இருளடைந்த மூலையில் யாரைப் பூசிக்கிறாய்? வெளியே வா! அவன்போல நீயும் புழுதியில் இறங்கு; நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் இறைவனைக் கண்டுகொள்" என்பது இரவீந்திர நாத தாகூரின் கீதாஞ்சலி பாடல் ஒன்றின் கருத்து. மக்களுடன் மக்களாக ஒன்றி உழைப்பதே உண்மையான இறைவழிபாடு என்பது இதன் கருத்து.

"உங்களுடைய பக்தியும் முக்தியும் யாருக்கு வேண்டும்? உங்களுடைய சாத்திரங்கள் என்ன சொல்லுகின்றன என்பது பற்றி யாருக்குக் கவலை? என்னுடைய நாட்டு மக்களை உயர்த்துவதற்காக நான் ஆயிரம் முறை வேண்டுமானாலும் நரகத்துக்குச் செல்லத் தயார். நான் யாருடைய ஊழியனும் அல்லன். தன் முத்தியைப் பற்றி நினையாது பிறருக்கு உதவிபுரிந்து பணிசெய்பவனுக்கே நான் பணியாள்" என்பது சுவாமி விவேகானந்தர் வாக்கு. மக்களுக்கு உதவுதலே மெய்யான முத்தி என்பதை இது விளக்குகிறது.

ஏசு, தன்னால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களிடம், "தாழ்ந்த நிலையிலுள்ள என் உடன்பிறந்தார்களாகிய மக்களில் ஒருவருக்கு நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ அதை எனக்கே கொடுக்கிறீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன" என்றார். அதேபோல அவரால் ஏற்கப்படாதவர்களிடம், "மிகவும் தாழ்ந்த நிலையிலுள்ள என் உடன்பிறந்தவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார். எனின் ஏழைக்குக் காட்டும் அன்பே, இறைவனுக்குச் செலுத்தும் அன்பு என்பது விவிலியக் கருத்தாகிறது.

இத்தகைய கொள்கைகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பே நம் அடிகளார். அவருடைய எழுத்துகள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளிக்கொணரும் சீரிய பணியை மணிவாசகர் நூலகம் மேற்கொண்டிருக்கிறது. திருக்குறள் பற்றி அடிகளார் ஆற்றிய உரைகள், அவர் எழுதிய கட்டுரைகள், தனித்தனிக் குறளுக்கு அவர் தந்த விளக்கங்கள் கொண்டதாக இம் முதல் தொகுதி அடிகளாரின் வள்ளுவச் சிந்தனைகளை உள்ளடக்கியிருக்கிறது.