பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செய்து, தற்சார்பைத் தன்னலத்தைத் தீரத்துறந்து, இன்புறுத்தும் இல்லற நெறியை ஏற்று ஒழுகின் அஃது இறைநெறியாம். வாழ்வாங்கு வாழ்தலே இல்லற வாழ்க்கை யென்று வள்ளுவம் வரையறை செய்கிறது. இத்திருக்குறளுக்கு உரைவிளக்கம் செய்வார் போல உய்யவந்த தேவநாயனார்,

"பெற்ற சிற்றின்பமே பேரின்ப மாயங்கே
முற்ற வரும்பரிசு உந்தீபற
முளையாது மாயையென்று உந்தீபற"

(திருவந்தியார் 33)

என்று கூறுவார்.

திருவள்ளுவர் துறவறத்தையும் கூறுகிறார். திருவள்ளுவர் காட்டும் துறவறம் பெண்ணை வெறுத்த துறவறமா? மனையறத்தை வெறுத்த துறவறமா? என்று அறியப் போதுமான அகச்சான்றுகள் வெளிப்படையாக இல்லை. பல ஆண்டுகள் இல்லறம் இயற்றிய பிறகு, உயிர் நலம் கருதியும் பொதுநலம் கருதியும் மனையறத்தைத் துறந்து தவ வாழ்க்கை இயற்றுதலைத் துறவறம் என்று தொல் காப்பியம் கூறுகிறது.

"காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்தவன் பயனே" -

(தொல் பொருள் கற்பியல் 51)

என்பது தொல்காப்பியம். இத்தகைய வாழ்க்கையைத் தான் வள்ளுவம், துறவறத்தில் எடுத்துக்கூறுகிறது என்று கருத இட மிருக்கிறது. துறவறவியலில் சுறப்பெற்றுள்ள அதிகாரங்களை நோக்கி ஒரோவழி இல்வாழ்க்கையின் சூழ்நிலைகளால் தோன்றும் தவறுகளையும் முற்றாகத் தவிர்த்து வாழ்தல் என்பது பெறப்படுகிறது. இல்வாழ்க்கையிலும் கூட வெகுளா திருத்தலும், வாய்மை போற்றுதலும் வேண்டற்பாலனவாம். ஆயினும் அறியாதாரை அறநெறியிற் செலுத்தவும் தற்காப்