பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அன்புணர்வைக் கெடுக்கும். கேடு செய்வதில் இவையிரண்டுக்கும் ஈடு எதுவுமில்லை. இவ்வுலகத்தில் சிறைக்கூடங்களைப் பெருக்கிவளர்த்தவை இவ்விரண்டும்தானே! பெண், மண்ணும் பொன்னும் செய்யும் தீமையைச் செய்ய மாட்டாள். இரக்க உணர்ச்சியைத் தூண்டிவளர்க்கும் ஆற்றல் பெண்ணுக்கு உண்டு. ஆனால் தமிழகத்துத் துறவு வாழ்க்கையில் மண்ணையும் பொன்னையும் துறக்காமல் பெண்ணை மட்டுமே துறக்கும் நெறி மேற்கொண்டதால் துறவிலும் முழுமையான வெற்றி பெறவில்லை. உடைமைகளின் பெருக்கத்தால் ஒழுக்க நெறியிலும் காலூன்ற இயலவில்லை. அதன் விளைவாகத் துறவிகள் வாழும் மடங்களும் பூட்டுக்கள் உடையனவாக, தணிக்கைகளுக் குரியனவாக, வழக்குகளுக்கு உரியனவாக வளர்ந்துள்ள அவலநிலையை நினைந்து வருந்த வேண்டும். ஒரு சாதிக்குச் சமயத் தலைவராக விளங்குபவர் - ‘சகத்குரு’வாகி விடுகிறார். கிறித்துவத் துறவுநெறி சற்றுப் பரவாயில்லை. ஏன், அங்கு நாடுகளை - இனங்களை - சாதிகளைக் கடந்த துறவிகள் பல்லாயிரவர் கூடிக் கூட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்களில் யாருக்கும் சொந்தத்தில் உடைமையில்லை. நீதியியலில் தனி ஒரு துறவிக்கு உரிமை இல்லை. அவர்களுக்கு ஓரூரும் கிடையாது; ஓர் இடமும் கிடையாது. அத்தகையதொரு துறவுநெறி போற்றுதலுக்குரியது; தவறுகள் நிகழாமல் தற்காப்பதற்குரிய வாய்ப்புகள் நிறைய உண்டு. ஆயினும் அதுவே ஏற்புடையதாக, சிறப்புடையதாக அமையவில்லை; குறைகளும் குற்றங்களும் மலிந்து விட்டன. பதினைந்தாம் நூற்றாண்டில் செருமனியில் தோன்றிய மார்ட்டின் லூதர் மனையறவாழ்க்கை மேற்கொண்ட புதிய கிறித்துவ சமயத்தைத் தொடங்கி வெற்றி பெற்றுள்ளார். இன்றைய தமிழகத்தில்கூடத் தென்னிந்தியத் திருச்சபை வழி அவர்கள் செய்யும் தொண்டு பாராட்டுதலுக்குரியது. அதுபோல இந்த நாட்டில் சமய நம்பிக்கையுடைய படித்த இளைஞர்கள்