பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 151


மாற்றம் காண முயலவேண்டும். ஆதலால் வள்ளுவம் காட்டும் சமயநெறியில் துறவு வாழ்க்கை, உள்ளத்தை மாசுபடுத்தும் தன் நலத்தைத் துறந்து, பொது நலத்தை நாடித் தவம் செய்தலாகும். தவம் என்பது உடலால் உயிரால் உணர்வால் செய்யக் கூடியது. உடலில் அகநிலை, புறநிலை உறுப்புகள் தத்தம் நிலையில் நிற்காமல் துய்க்கும் வேட்கை தணிந்து மற்றவர்களை இன்புறுத்தவேண்டும் என்ற பெருநெறியில் செல்லுதலே துறவறம். இதுவரையில் தன்னலம் கருதியும் சுற்றத்தார் நலம் கருதியும் நாட்டின் நலம் கருதியும், மேற்கொண்ட ஒழுக்கங்களை நிறைவு செய்து கொண்டு, அதனினும் விஞ்சிய மெய்யுணர்வு நாட்டத்தில் தவம் மேற்கொள்ளுதலை வள்ளுவம் வாயாரப் போற்றுகிறது.

“ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு"

81

இதுவே திருவள்ளுவர் கண்ட சமய வாழ்க்கையின் துறவறம்.

சமயநெறி, முன்னர்க் குறிப்பிட்டதைப் போல அகநிலையைச் செழுமைப்படுத்துகிறது; புலன்களுக்குச்சீலம் சேர்க்கிறது; அவ்வழி, அது பொறிகளையும் தூய்மை செய்கிறது ஆதலால் சமயம் சார்ந்து வாழும் சமுதாயம் அன்பினால் தழைத்து வளரும்; இன்பம் துய்க்கும்; ஆங்கு மறந்தும் ஒழுக்கக் கேடுகள் தலைகாட்டா; கனவும் காவலும் இல்லை; உடையாரும் இல்லாரும் இல்லை; சிறைச்சாலைகள் இல்லை. எங்கும் அறச்சாலைகளே உண்டு; மனித குலத்தை வேறுபடுத்துகிற வேறுபாடு இல்லை; பகையும் இல்லை; போரும் இல்லை. இங்ஙனம் வாழும் சமுதாயமே சமயம் சார்ந்த சமுதாயம்.

வாழ்க்கையில் இயல்பாக மலர்ந்த சமயம், காலப் போக்கில் அறிவாராய்ச்சியில் தலைப்பட்டு மெய்ஞ்ஞானத்தை வளர்க்கும் விஞ்ஞானமாக வளர்ந்தது. சமயத் தத்துவங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் ஆகியன