பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 153


திருவள்ளுவர் கண்ட கடவுளுக்கும் உருவமில்லை. 'யான்', 'எனது' என்னும் செருக்கற்ற உயிர்களைத் தாங்கும் தகுதிமிக்க திருவடியைத் தாள்கள் என்கிறார். இது வள்ளுவர் காட்டும் கடவுளியல்.

உயிர்

உயிர்! அருமையான தமிழ்ச்சொல். உய்தற்குரியது உயிர். உய்யும் தகுதியுடையது உயிர். உயிர்கள் கடவுளாலோ, மற்றும் யாராலோ படைக்கப்பட்டன அல்ல. கடவுளைப் போலவே உயிர்களும் என்றும் உள்ளவை.

"என்று நீ அன்று நான்”

என்பர் தாயுமானார். உயிர்கள் தோற்றமும் அழிவுமில் லாதன. கடவுள் ஒன்று; உயிர்கள் பலப் பல. உயிர்கள் என்றும் உள்ளன என்பதே திருக்குறளின் கொள்கை.

"மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது”
(68)
"தீதுண்டோ மன்னும் உயிர்க்கு"
(190)
"மன்னுயிர் ஓம்பி"
(244)
"மன்னுயிர் எல்லாம் தொழும்"
(268)
"மன்னுயிர்க்கு இன்னா செயல்”
(318)

என்ற குறட்பாக்களில் திருவள்ளுவர் உயிர்களை மன்னுயிர்' என்றே குறித்தல் காண்க. மன்னுதல் என்பதற்கு நிலைபெறுதல் என்று பொருள்.

"புரத்தல், துஞ்சல், அற்கல், மன்னல்
நிலைத்தல் ஐந்தும் நிலைபே றாகும்".

(சேந்தன் திவாகரம்: செயல் தொகுதி: 5)

என்பது சேந்தன் திவாகரம். ஆதலால் உயிர்கள் என்றும் உள்ளன என்பதே திருக்குறளின் கொள்கை.