பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உள்ளத்தில் ஏற்படும் உணர்ச்சிகள் இவைகளுக்குத்தான் பயன், செயலால் நல்வினை போலத் தோன்றும். கட்புலனுக்கு நல்லன போலத் தோன்றுவன - பூசை செய்தல், கொடை, ஈதல் முதலியன; ஆனால் பூசை செய்யும் ஒருவன் இன்ப அன்பு நிலையைத் தவிரப் பிறிதொன்றைப் பெற விரும்பிச் செய்வானானால் அவன் எல்லையற்ற இன்பநிலை யடையமாட்டான். அவன் எதை நினைத்துச் செய்தானோ அதுதான் பயனுக்கு வரும். மீண்டும் அது அவன் நினைப்பிற் கேற்ற நல்வினையாகவோ தீவினையாகவோ பயனுக்குவரும்; நல்வினை வழிப்பட்ட பயனைஇன்பத்தைத் துய்க்கும்பொழுது ஏற்படும் உணர்வு மாறுபாடுகள், தீவினையாகவும் உருமாற்றம் பெறலாம். நோயின் கொடுத்துன்பத்தால் ஒருவன் துன்புறுகிறான். அதனைக் கண்ணுறும் மருத்துவர், அறுவை முதலியன செய்யும்போது நோயாளி இறந்து விடலாம். காட்சியளவில் இது கொலை போலத் தோன்றும். ஆனால் நோக்கம் மருத்துவம்; ஆதலால் கொலையாகாது; இது தீவினையாகாது. ஆனாலும் தக்க ஊதியம் பெறவில்லையென்ற காரணத்தாலோ பணியின் சோர்வினாலோ அறுவை மருத்துவத்தைக் கவனமாகச் செய்யாது இறப்பு நேரிடுமானால் அது தீவினை யாகும். அவ்வழிப்பட்ட துன்பத்தைத் துய்த்தேயாகவேண்டும். இஃதொரு நியதி. புவி ஈர்ப்பு ஆற்றலைப் போல இஃதொரு இயற்கை நியதி, கோள்களின் இயக்கம், எங்ஙனம் நியதிப்படி நடக்கிறதோ அதுபோல வினைகளை வினைகளின் பயனை வினைகளைச் செய்தார் துறத்தல் வேண்டும் என்ற நியதி செயற்படுகிறது. இந்த முறைபிறழாத செயற்பாட்டுக்குக் காரணம், உயிர்செய்யும் வினைகளுக்குரிய உணர்வுகளில் அழுத்தங்கள் அல்லது பதிவுகள் உயிருக்குள் அடங்கிக்கிடப்பதேயாகும். அவை உரிய காலத்தில் ஊழ்த்து வெளிப்பட்டுச் செயற்பாட்டுக்கு வருகின்றன. - அந்த நிலையில், துய்ப்புக்கு - பயனுக்கு உரிய வினையை “ஊழ்”,