பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 157


என்று குறிப்பர். ஊழின் பயனைத் துய்த்துக் கழிக்காமல் அதாவது ஊழிற்குக் காரணமாக அமைந்த உயிரில் பதித்த உணர்வுத் தடத்தை அழித்து எழுதாமல் வேறு ஒரு வகையாக வாழ்தல் அரிது; இயலாது. அதனால் ஊழின் வலிமையைப் பெரிது என்பர். அதன் பொருள் ஊழின் பயனைத் தட்டிக் கழிக்க முடியாது என்பதேயாம். ஆனால் ஊழின் நடத்தை அழித்து எழுத முடியாது என்பது பொருளன்று, முன்னர்ச் செய்த வினைகளின் வழியாக அமைந்த தீயூழ், நல்லூழ் இவைகளிலும் விஞ்சிய நல்வினைகளை நன்னோக்கத்துடன் அயர்விலாது செய்தால் ஊழின் தடத்தையும் அழித்தெழுதலாம். அனுபவத்திற்கு வந்த ஊழின் விளைவு களையும் எளிமையாகத் துய்த்து நீக்கமுடியும். ஆதலால் சம்யத்துறையில் ஊழைப் பயன்படுத்தி முன்னேற்றத்திற்குரிய தடை உணர்வை உருவாக்குதல் நெறியும் அன்று; முறையும் அன்று.

வினைகளின் பயன் மீண்டும் சுழற்சியாக வாராமல் தடுத்து நிறுத்தி உயிரை இனிய அன்பில் நிறுத்துவதற்குரிய ஒரே வழி வினைகள் செய்யாதிருத்தலன்று. வினைகளைச் செய்யாதிருத்தலும் ஒரு வினையாகும். ஓயாது வினைகள் இயற்றி உயிர்ப்பாக வாழ்தலே வாழ்க்கை. சமய வாழ்க்கையில், இறைநெறியில் நின்று மனித உலகத்தை நேசித்துத் தூய்மையான நோக்கத்துடன், “இறைவனின் கருவியாகத் தொழிற்படுகிறோம்” - என்ற உணர்வுடன் வினைகளைச் செய்தும் அவைகளின் பயனை இறை வனுக்கும் மக்களுக்கும் என்று அர்ப்பணித்தால் அவ்வினை கள் அருள்சேர் வினைகளாகும். இத்தகு வினைகளுக்கு உயிரைக் கறைப்படுத்தும் குணம் இல்லை. ஆதலால் வாழும் ஊழும் வாராது. இதுதான் வள்ளுவத்தின் ஊழியற்கொள்கை.

ஊழின் வலிமையை வள்ளுவம் வலியுறுத்துகிறது; "ஊழிற் பெருவலி யாவுள!” என்று வினவுகிறது. ஊழிற்குத் திருக்குறள், எந்தக் குறளிலும் வெற்றியைச் சேர்க்கவில்லை.