பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆனால் ஆள்வினையுடைமை அதிகாரத்தில் ஊழை எதிர்த்து மானுடம் வெற்றி பெற முடியும் என்பதனை,

"மெய்வருத்தக் கூலி தரும்" (615
"ஊழையும் உப்பக்கம் காண்பர்; உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்" (620)

என்று கூறுதல் அறிக. ஊழ் அனுபவத்திற்கு வருவதற்கும் உயிர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் தொடர் பில்லை. ஊழிற்குக் காரணமான பழைய பழக்கம் அதாவது உழுதகால் வழி உழுதல் போன்ற பழக்க வாசனை காட்டும். கற்றல், கேட்டல், சிந்தித்தல், முதலிய முயற்சிகள் மூலமும், புத்தறிவைப் பெற்றுப் புதிய பழக்கங்களை ஏற்றுக் கொள்வதன் மூலமும், பழைய பழக்கத்தை மாற்ற முடியும். ஊழுக்குக் காரணமான பழைய உணர்வு ஊழ்த்து வெளிப்படுகிறது. உயிர் பெற்றுள்ள பொறி புலன்கள் தன்னியல்பில் சிந்தித்தும், அதைவிடச் சிறப்பாகப் புறத்தே இருந்து புதிய கொள்முதல் செய்தும் ஊழ்த்துவரும் ஊழின் ஆற்றலை அடக்கியும் வெற்றிகாணமுடியும். இதற்குத் தேவை புதியன நாடும் ஆர்வம், தற்சலுகையின்மை, தன்னயப் பின்மை ஆகியனவாம். இந்த உணர்வுகள் மேலோங்கினால் ஊழ் அதற்குள் அடங்கும்; செயற்பாட்டைக்கூட இழந்துவிடும். ஆனால் அது எளிதான காரியமன்று. அதற்கு விலை கொடுக்க வேண்டும். எளிதில் செரிக்காத உணவைச் சுவையூற்றத்தின் காரணமாக உண்டுவிட்டால் கொஞ்சம் வயிற்று வலியைத் தாங்கித்தான் ஆகவேண்டும். ஒரு வேளைக்கு உணவை மறந்து வாயைக் கட்டிப்போடத்தான் வேண்டும். இது நடைமுறைப் பழக்கம்தான். நேற்றைய பழக்கத்தின் வழித் தவறுகளை இன்றைக்குத் திருத்தமுறச் செய்ய வேண்டுமானால், கடுமையான விலை கொடுத்தேயாக வேண்டும். ஊழை மாற்றும் ஆற்றல் நேரிய உழைப்புக்கே உண்டு. அதனால் "மெய் வருத்தக் கூலி தரும்" என்றார். இந்த இயற்கை நியதி உணர்வுகளுக்கும்