பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இயல்புக்கு மாறான நுண்ணறிவு தொழிற்படுகிறது. சிலரிடத்தில் இயல்பாகவே சான்றாண்மை குடிகொண்டிருக்கிறது. இவையிரண்டும் உயிரின் இயல்பானவையல்ல. அவை எடுத்த பிறப்புக்களில் எல்லாம் ஈட்டியவையே! எடுத்த அந்த ஒரு பிறப்பிலேயே ஈட்டப் பெற்றவையல்ல என்பதும் நமக்குத் தெரிகிறது. பல்கலைக் கழகங்களின் வாயிற்படிக்கே போகாதவர்கள் கூட சீரிய சிந்தனைத்திறனுடனும் செயல் திறனுடனும் விளங்குவதன் அருமைப்பாடு என்னே! முன்பே அவர்கள் கற்றுத் தேடிவைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை . பலகாலம் சிந்தித்துப் பழகியிருப்பதால் சிந்தனைப் புலன் எளிதில் தொழிற்படுகிறது என்பதுதானே அறிவியல் உண்மை. ஆதலால் திருக்குறள், பலபிறப்பு உண்மையை நம்புகிறது. அதனை மறுத்துரைக்கக்கூடிய மார்க்சியம் தோன்றியுள்ளது. மார்க்சியம் பொருளியல் விஞ்ஞானநூல். ஆயினும் உயிரியல் பற்றிய அறிவியல் உலகம் இன்னமும் தெளிவாக உயிரின் பல பிறப்பு உண்மையை மறுக்கவில்லை. வள்ளுவத்தின் கொள்கை உயிர்கள் பல பிறப்புடையன; அவை பல்வேறு பிறப்புகளில் படிமுறையில் வளர்ந்து வருகின்றன என்பதேயாம்.

கடவுள் உண்மை

இன்றைய உலகியலில் அடுத்துப் பெரிய விவாதத்திற் குரியது கடவுளேயாம். “கடவுள் இல்லை; இல்லை! இல்லவே இல்லை" என்று கூறி இந்த நூற்றாண்டின் வரலாற்றைத் தலைவர் பெரியார் எழுத முயன்றார். தலைவர் பெரியாரின் பல்வேறு கொள்கைகள் வெற்றி பெற்றிருந்தாலும் கடவுள் மறுப்புக் கொள்கை எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பது ஆய்வுக்குரியது. திருக்கோயில் எண்ணிக்கைப் பெருக்கமும் உண்டியல் பெருக்கமும் இதற்கு எதிரிடையான விடையே தருகின்றன. 'மூலதன'த்தின் முதல் ஆசிரியராகிய மாமுனிவர் கார்ல் மார்க்ஸ் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர். பொதுவுடைமைத் தத்துவம் கடவுள் மறுப் பிலிருந்து பிரிக்க முடியாதது. கடவுள் மறுப்புத்தன்மை-