பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தரளை வணங்காத் தலை" (9)

என்ற குறள்கள் நேரிடையான வழிபாட்டு முறையை வலியுறுத்துகின்றனவேயன்றித் தரகர் முறை வழிபாட்டைப் பற்றிக் கூறாமையை உய்த்துணர்க.

பொறிவாயில் ஐந்தவித்தலாவது யாது? அது நுண்ணிய பொருளாக்கமே உடையது. பொறிகள் ஐந்தின் உணர்வுகளை அழித்தல். இயற்கைக்கு முரணான செயல்முறை, முறையற்ற வழியில் அடக்குதல் இயலாது. முறையற்ற வழியில் அடக்க முயன்றால் புறத்தோற்றத்தால் அடங்கியது போலத் தோற்ற மளித்து, ஒரோவழி முறைபிறழ்ந்த வழிகளில் மேவிச் செல்லும். எந்த ஒன்றையும் போக்கிடமில்லாது அடைத்து அடக்குதல் இயற்கையறிவியலுக்கு முரணானது; நடைபெறக் கூடியதுமில்லை. அது போலவே அழித்தல் என்பது இயற்கைக்கும் அறநெறிக்கும் இசைந்த கருத்தன்று. அளித்தல் என்ற சொல் பக்குவப்படுத்துதல் என்ற பொருள் தரும். நெல், கிழங்கு முதலியனவற்றைப் பக்குவப்படுத்தும் முறைக்கு 'அவித்தல்' என்பது வழக்கு. அந்த வழக்கை ஒப்பு நோக்குக. சுவைத்துப் பயன்படுத்துவதற்குத் தக்கவையாக இல்லாத பொருள் களைச் சுவைத்துப் பயன் கொள்ளத்தக்கவாறு பக்குவப்படுத்துதலை அவித்தல் என்று கூறுவது வழக்கம். அதுபோல உயிர், பயன்கொள்ளத்தக்கவாறும் அவ்வுயிரைச் சார்ந்து வாழும் மற்றவர்கள் அண்ணித்து நின்று சுவைக்கு மாறும், பயன்படுத்துமாறும் இல்லாமல் கரடு முரடாக இருக்கும் புலங்களையும் பொறிகளையும் பக்குவப்படுத்தி நிறைநலமும் நிறை இன்பமும் பொதுளும் தன்மையதாக மாற்றியமைத் தலே அவித்தல் என்பது. மனிதனின் இந்தக் குணமாற்றச் செயல்முறையை - பண்பாட்டுப் பக்குவமுறையைப் பெற ஆர்வங்களையும் ஆவல்களையும் தன்னை நோக்கியதாக அல்லாமல் உயிர்க்குலத்தை நோக்கியதாக, உயிர்க் குலத்திற்குத் தண்ணனிதருவதாக.