பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 167


விளங்கும் கடவுளை நோக்கியதூக மடைமாற்றம் செய்தலே உரிய வழி.

இறைவன் அல்லது கடவுள் என்பது எல்லா உயிர்களும் இன்புற்றமரும் பெருநிலையின் எல்லையையே குறிக்கும். அப்படியானால் “நற்றாள்”, “மாணடி”, “அடி", "தாள்” என்றெல்லாம் திருவடிகளை மட்டுமே குறிப்பிடுகிறாரே! ஏன்? பிற்காலத்தில் பொய்ம்மை நிறைந்ததாகவும், மனிதகுலத்துக்குத் தீமை செய்வதாகவும் புகுந்த நால்வருணத் தோற்றத்தின்படி பார்த்தால் திருவடிகள் ‘சூத்திரர்'களையே தந்தன; இழி மக்களையே தந்தன என்று கூறுகிறது.

ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத் பாஹு ராஜன்ய; க்ருத
ஊருத தஸ்ய யத் வைச்ய பத்ப்யாம் சூத்ரோ அஜாயத;

(புருஷஸூக்தம் 1: 13)

(இவருடைய முகம் பிராம்மண ஜாதியாக ஆயிற்று; கைகள் க்ஷத்திரிய ஜாதியாகச் செய்யப்பட்டன; இவருடைய தொடைகள் எவையோ அவை வைசிய ஜாதியாக ஆயிற்று; பாதங்களினின்று சூத்திர ஜாதி உண்டாயிற்று)

உண்மையான சமய அனுபவமிக்க எந்த ஞானியும் இறைவனின் தலையை நினைந்துருகிப் பாடியதில்லை. ஆனால் சூத்திரன் பிறந்ததாகக் கூறப்படும் திருவடிகளையே திருவள்ளுவர் முதலிய சான்றோர்கள் போற்றியுள்ளனர். திருவள்ளுவர் 'தாள்' - திருவடி என்று இறைவனை உருவகம் செய்தது ஒரு மாறிலாத் தத்துவத்திற்குக், கொடுத்த உருவகமேயாகும். உலகைத் தாங்குவது தாள். தாள், உழைப்பின் சின்னம்; தாளாற்றுதல் என்பது உழைப் பியற்றுதல். தாளாற்றித் தந்த பொருளால் வேளாண்மை செய்தல் வேண்டும். வேளாண்மை செய்தலுக்கு 'யான்', 'எனது' என்ற உணர்வுகளைக் கடந்த உழைப்புத் தவம் செய்யும் உத்தமநிலையேயாம். இதுவே வள்ளுவத்தின் தெளிவு!

வள்ளுவம் கடவுளை நம்புகிறது. ஆனால் அது ஆணும் அல்ல; பெண்ணுமல்ல. வள்ளுவம் காட்டும் கடவுளுக்குக்