பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கோபுரங்கள், கோட்டைகள் இல்லை வள்ளுவத்தின் கடவுளுக்கு கணக்கும் இல்லை; வழக்கும் இல்லை. அது பேரறிவு; தூய்மையான அறிவு; குணங்களின் திருவுரு: இன்பத்தின் திருவுரு; அன்பின் திருவுரு; அறத்தின் அடையாளம்! அஃது ஓரூரில், ஓரிடத்தில் இருப்பதன்று; எங்கணும் நீக்கமற நிறைந்து நிற்பது! உய்த்துணர்வார்க்கு உள்ளத்தின் துணையாய்த் தோழமையாய் நின்று தொழிற் படுத்துவது; வெற்றிகளைத் தருவது; இன்பங்களைத் தருவது. இத்தகைய வள்ளுவத்தின் கடவுள் நெறியை மறுப்பார் யார்? வள்ளுவத்தின் கடவுள் நெறி வையகத்திற்கு உரிமையாக வேண்டும்! மனித குலத்தில் சமய நெறிகளில் மண்டியிருக்கும் புறச் சமயப் புதர்க்காடுகளை அழித்து வள்ளுவத்தின் சமய நெறியை உலகப் பொதுச் சமயமாக்க வேண்டும்.

இன்று, உலகெங்கும் சமய வேறுபாடுகள் மலிந்து காழ்ப்புணர்ச்சிகளைத் தோற்றுவித்திருக்கிறது. சென்றகால வரலாற்றில் சமயம் மனித உலகத்தின் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் செய்த பணிகள் நினைவிற்குரியன; போற்றுதலுக்குரியன. ஆனாலும் இடையிடையே சமய அமைப்புகள் மக்களிடையே பரப்பிய மூட நம்பிக்கைகளும். சமய நிறுவனங்களுக்கிடையே நிகழ்த்த போர்களும் அந்த நற்பணிகளை மறைத்து விட்டன. விஞ்சியது சமயநெறிக்குப் புகழும் பெருமையுமல்ல; பழியாகவே அமைந்துவிட்டது. சமய நம்பிக்கையுடையோர் இதனை நினைந்து வருந்த வேண்டியிருக்கிறது. மீண்டும் இந்தத் துன்பியல் வரலாறு" தொடர்ந்து நிகழாமல் தூய சமய நெறிவழியே சமுதாயத்தை வழிநடத்தி வாழ்விக்க விரும்பினால் மனிதகுல வேறு பாடுகளை, சமய வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளாத வள்ளுவத்தின் சமயம் உலகப் பொதுப்பெருஞ் சமயமாக இடம் பெறச் செய்ய வேண்டும். மனித குலத்தின் உரிமைகள் இயற்கையில் அமைந்தவை. அந்த உரிமைகளை நாடுகளின் அமைப்பின் மூலமோ அரசியல்களின் மூலமோ சமய