பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 169


அமைப்புகளின் மூலமோ, புன்மையான சாதி குல அமைப்புகளின் மூலமோ யாருக்கும் பறிக்க உரிமையில்லை. உயிர்கள் பிறப்பிலேயே ஒத்த உரிமையுடையன.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” (972)

இது திருவள்ளுவர் சமயத்தின் உயரிய கோட்பாடு. இந்தக்கோட்பாடு உலகில் இடம் பெற்றால் தான் வெள்ளையர், கறுப்பர், தீண்டத்தகாதவர் என்று மனித குலத்தினைப் பிரித்து ஆட்டிப்படைக்கும் தீமைகள் மறையும். கடவுள் அருச்சனைகளால், ஆராதனைகளால், படையல் களால் திருப்தி செய்யத்தக்கவரல்லர் என்ற வள்ளுவத்தின் கொள்கை இடம் பெற்றால்தான் வாழ்க்கையோடிசைந்த அறிவியல் சமயம் உலகில் வளரும். வாழ்வாங்கு வாழ்தலே சிறந்த வழிபாடு என்ற வள்ளுவத்தின் சமயநெறி வெற்றி பெற்றால்தான் சமுதாயத்தில் புரோகிதர்கள் உலா வர மாட்டார்கள்; சமய நிறுவனங்கள் தோன்றா; அவைகளுக்குள் ஆதிக்கப் போட்டிகளும் இரா. வள்ளுவத்தின் சமயம் வெற்றிபெறுமானால் தொண்டு நிறுவனங்கள் எங்கும் தோன்றும்; தொண்டர் குலம் தழைக்கும்; மனிதகுலமும் தழைக்கும். எனவே வள்ளுவத்தின் சமயம் உலகப் பொதுச் சமயமாக மலரும் நாளே மனித குலத்திற்குப் பொற்காலம் படைக்கும் நன்னாளாகும்.

திருவள்ளுவர் தந்த திருக்குறள் ஒரு சமயத்திற்காகத் தோன்றிய நூலன்று. அது சமயச்சார்பற்ற நூல், ஆயினும், மனித குலத்தைச் சிந்தனையில், அறிவியலில், வாழ்க்கையில் வழி நடத்தும் பொழுது திருக்குறட் கொள்கை சமயமாக உருப்பெறுகிறது. வள்ளுவத்தின் சமயம் நெகிழ்ந்து கொடுக்கக் கூடியது; நம்பிக்கையுடன் கூடியது: நல்லெண்ணத்தின் பாற்பட்டது; இயற்கைக்கு இசைந்தது; மெய்யுணர்தலின் பாற்பட்டது; ஒரு வாழ்க்கை முறையாக அமைவது! வள்ளுவத்தின் சமயம் வையகத்திற்கு உரிமையாகுக.