பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்



திருவள்ளுவர் - அரசியல்
(மூன்றாம் நாள் சொற்பொழிவு)

மனித குல வரலாறு உயிர்ப்புடையது. இடையீடின்றித் தொடர்ந்து நடைபெறுவது; வளர்ச்சி நோக்கிச் செல்வது; மாற்றங்களைத் தரவல்லது. மாறுதல் இயற்கை நியதி. இந்த இயற்கை நியதியின் வழி மனித குல வரலாறு பெற்ற மாறுதல்கள் பலப்பல. சிலபொழுது வரலாறு நெறியல்லா நெறியதனை நெறியென்று கருதித் தடம்பிறழ்ந்து செல்லு தலும் உண்டு. சில சமயங்களில் வரலாற்றுப் போக்கின் எதிர்விளைவுகளைத் தாங்கிக்கொள்ள ஆற்றலில்லாமல் தேங்கி நிற்பதும் உண்டு. இத்தகைய சூழ்நிலைகளில் தடம் பிறழ்ந்த சமுதாயத்தை, நன்னெறியாகிய தடத்தில் நெறிப் படுத்தவும் தேங்கியிருக்கின்ற மனித குலத்திற்கு உந்து. சக்தியாக விளங்கி உந்திச் செலுத்தி வழி நடத்தவும் சிந்தனையாளர்கள் உருவாகின்றனர். அங்ஙனம் தோன்றிய சிந்தனை யாளர்களில் திருவள்ளுவரும் ஒருவர்.

திருவள்ளுவர், திருக்குறள் என்ற மறையைத் தந்தார். திருக்குறள். தமிழினத்துத் தோன்றலாகிய திருவள்ளுவர் தந்ததாலும், தமிழ் மொழியில் அமைந்ததாலும் தமிழ் மறை ஆயினும் திருக்குறள் உலகந்தழீஇய ஒட்பமுடையது; நாடு, இனம், மொழி, சமயம் முதலிய எல்லைகளைக் கடந்து மனித குலத்தின் மேம்பாட்டையே மையமாகக் கொண்டு விளங்குவது. திருக்குறள் வேற்றுமைகளை விளைவிக்காத வாறு ஒரு நாட்டையோ, ஒரு. மொழியையோ, ஓரினத்தையோ; ஒரு கடவுளையோ சிறப்பித்துக் கூறவில்லை.