பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நாட்டில் வறுமையைவிடச் செல்வம் துன்பம் தரக்கூடியது என்றும் கூறுகிறது.

"இன்மையின் இன்னா(து) உடைமை முறைசெய்யா
மன்னவன் கோல்கீழ்ப் படின்."

558

இதன் பொருள் என்ன? முறைகேடான அரசு தகாத வழிகளில் பொருளுடையாரைத் துன்புறுத்திப் பொருளைக் கொள்ளும் என்பது தானே! அரசு, குடிமக்களிடத்தில் பொருளைக் கேட்டுப் பெறுவதை வள்ளுவம் தடை செய்வதால், மக்களே அரசுக்குரிய வரியை வலிய வழங்க வேண்டும் என்பது உய்த்துணரப்படுகிறது.

"பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு"

(733)

என்ற குறள் இக்கருத்தை உறுதிப்படுத்துகிறது.

அரசு, குடிமக்கள் இடையில் உள்ள பொருளியல் ஒழுங்கு முறைகளைக் கண்டோம். குடிமக்களுக்கு என்ன நெறிமுறைகளை வள்ளுவம் கூறுகிறது? வள்ளுவம் காட்டும் அரசு குடிமக்களைத் தழுவிய முடி அரசு ஆட்சி, சிக்கலின்றி இயங்குவதற்காக ஒரு தலைவன் ஆட்சியில் அமர்ந்துள்ளான். ஆனாலும் ஆட்சியின் பொறுப்புகள் அந்த நாட்டின் மக்கள் அனைவரிடமும் பகிர்ந்தளிக்கப்பெற்றுள்ளன என்றே கருத வேண்டும். எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்ற பாரதியின் வாக்குக்குரிய பொருளும் இதுவே. ஆதலால் அரசியலில் சொல்லப் பெற்றுள்ள அதிகாரங்களில் மிகச் சிலவே ஆட்சித் தலைவனுக்கு உரியனவாக உள்ளன. மிகப்பல ஆட்சியை நடத்தும் அரசனுக்கும், அவனுடைய குடிமக்களுக்கும் பொதுவானவை. மக்களின் இயக்கத்திற்கும் பொறுப்புகளை நிறைவேற்றும் உணர்வுக்கும், முயற்சிக்கும் அரசு மறைமுக மாகத் தூண்டுகோலாகவும் துணை நிற்பதாகவும் அமைவதால் பொதுவாகக் கூறப்பெற்றன. செங்கோன்மை