பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 181


(அதி. 55 கொடுங்கோன்மை (அதி. 56) வெருவந்த செய்யாமை (அதி. 57 கண்ணோட்டம் (அதி. 58) ஒற்றாடல் (அதி. 77) படைச்செருக்கு (அதி. 78) ஆகிய அதிகாரங்கள் அரசுக்கேயுரியன. மற்றவை அரசவைக்கும் மக்களுக்கும் உரியன. ஆதலால் "பொருள் செயல் வகை" என்ற அதிகாரத்திலும் வேறு சில அதிகாரங்களிலும் சொல்லப்படும் பொருள் செய்யும் நெறியும் முறையும் குடிமக்களுக்கும் உரியவை, சொத்துரிமைபற்றித் திருக்குறள் அரசியல் என்ன கூறுகிறது? மனிதகுல வரலாற்றில் தொன்மைக் காலத்தில் பொதுவுடைமை முறையும் பின் தனி உடைமையும் அதன்பின் தனி உடைமை பொது உடைமை ஆகிய இரண்டும் கலந்த கலப்புப் பொருளாதாரமும் தோன்றிச் செயல்பட்டு வருகிறது. கார்ல் மார்க்ஸ் - தனி உடைமைச் சமுதாயம் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கும் ஒழுக்கத் திற்கும் அமைதிக்கும் இடையூறாவது என்று கூறியுள்ளார். வரலாற்று உண்மைகளையும் - மானிட சாதியின் உயர்வு - நெகிழ்வுகளையும் கற்றறிவார்க்கு மார்க்சியம் முரண்பட்டதன்று; உடன்பாடுடையதேயாம். அணுகுமுறைகளில் - நடைமுறைகளில் மாற்றம் ஏற்படலாம். தவறு இல்லை. முதலில் உடமை என்றால் என்ன? பொருள் என்றால் என்ன? பொருள் இருவகைப்படும். ஒன்று தனிநிலையில் மனிதன் துய்த்து மகிழ்தற்குரிய உடைமைகள் பொருள்கள் (Personal Property) ஆகும். பிறிதொன்று மனிதன் அறிவையும் உழைப்பையும் பயன்படுத்திப் பொருள் உற்பத்தி செய்வதற்குரிய அடிப்படை உரிமைகள் அதாவது உற்பத்திக் கேந்திரங்கள் (Private Property) ஆகும். இவ்விரண்டில் முதலாவதாக உள்ள உடைமைகளை மனிதர்கள் தமக்கு உரிமையாகப் பெறுவதிலும் அனுபவிப்பதிலும் அவர்களுடைய வழி வழி தலைமுறையினருக்குக் கொடுப்பதிலும் தவறில்லை; இரண்டாவது வகையினதாகிய உற்பத்திக் கேந்திரங்களைத் தனி மனிதர் உரிமைப்படுத்திக் கொள்ளுதல்