பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நன்றன்று. பொருள் என்றால் என்ன? நிலம், தொழிற் சாலைகள் ஆகிய உற்பத்திக்கேந்திரங்களையும் பணத்தையும் பொருள் என்று ஏற்கவில்லை. பொருள் என்பது மனிதகுலம் உண்டு, தின்று, உடுத்துத் துய்த்து மகிழ்வதற்குரிய பொருள்களேயாம். இதனை,

"........................யாஅம் இரப்பவை

பொருளும் பொன்னும் போகமுமல்ல......."

(பரிபாடல் 5, 78, 79)

என்னும் பரிபாடல் அடிகளில் பொருளும் பொன்னும் பிரித்து ஒதப்பெற்றுள்ளது காண்க. திருக்குறள்,

"பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை"

(247)

என்று கூறி இருப்பது அறிக. இங்குப் பொருள் என்பது மனித குலத்தின் நுகர்வுப் பொருள்களையே குறிக்கும். உணவும், தண்ணிரும் போன்ற பொருள்கள் இல்லை யானால் உலகில் வாழ்தல் இயலாது, ஆதலால் இவ்வுலகம் இல் என்றார், "செய்க பொருளை" (குறள் 759) என்று வள்ளுவம் ஆணையிடுகிறது. பொருள்களின் மாற்றுப் பதிவுகளாக விளங்கும் நாணயங்களை அரசு மட்டுமே அச்சடித்து வழங்க முடியும். ஒவ்வொரு குடிமகனும் நாணயங்களைச் செய்தால் எது நாணயமான நாணயம்? எது நாணயமற்ற நாணயம் என்பது தெரியாமற் போய்க் கறுப்புப் பணம், கணக்கில் வாரா மூலதனம் சிலரிடத்தில் குவிந்து நாட்டை அழிக்கும். ஆதலால் செய்க பொருளை என்பதற்கு உண்டு தின்று உடுத்து மகிழ்வதற்குரிய பொருள்களைச் செய்து குவிப்பா யாக என்றே பொருள் கொள்ள வேண்டும்.

மனித குலத்திற்குத் தனி உடைமை உரிமையைத். திருக்குறள் வழங்கவில்லை. திருக்குறள் பொது உடைமையே ஏற்றுப் போற்றியுள்ளது. வள்ளுவம் பல்வேறு உடைமைகளை வகுத்துக் கூறியுள்ளது. ஆனால் பொருளுடைமை என்று ஓர்