பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நிற்கும் ஒருவன் வறுமையில் அல்லற்படுகிறான். இந்த முரண்பட்ட காட்சி அன்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது. இந்த முரண்பட்ட நிலை ஏன்? இதற்குத் திருக்குறள் தந்துள்ள விடை அருமையானது; சிந்தனைக்குரியது; செயற்பாட்டிற் குரியது. இம் முறைபிறழ்வு - இயற்கை நியதி, கடவுளின் ’செயல்; முற்பிறப்பின் பயன் - என்றெல்லாம் திருக்குறள் சமாதானம் கூறவில்லை; முறைபிறழ்வை நியாயப்படுத்த வில்லை. இந்த முரண்பாட்டில் நியாயமில்லை; விதிகள் இல்லை. கடவுளுக்குச் சம்மதமில்லாதது. ஆதலால் முரண்பட்ட நிலையினை ஆராய்ந்து சோதனை செய்க. முறைப்படுத்துக என்றே குறள் கூறுகிறது.

"அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்"

(109)

என்பது குறள். நினைக்கப்படும் - ஆழமான பொருட் செறிவுடைய சொல். உழைப்பின் வழியதாகவே செல்வம் வருதல் வேண்டும். இது பொது நியதி, பொதுவுடைமை விதி; பொருள் வளர்ச்சிக்குரிய விதியும் கூட. ஆதலால் செல்வத்தை உற்பத்தி செய்துவரும் உழைப்பாளிகளை வள்ளுவம் வாழ்த்துகிறது; உழைப்பாளிகளுக்குப் புகழ்ப் பரணி பாடுகிறது. உழைப்பாளிகள் அல்லாதவர்களை வயிற்றுப் பிழைப்புக்காகத் தொழுது உணவு வாங்கி உயிர் பிழைப்போர் என்பது போலக் கொச்சைப்படுத்திப் பேசுகிறது.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்”

(133)

என்று கூறுகிறது. மேலும் திருக்குறள் தோன்றிய காலத்தில் உழவுத் தொழிலே பெரிய தொழில், திருக்குறள் நிலவுடைமை உரிமைபற்றிக் கூறுவது ஆய்விற்குரிய செய்தி. நிலத்தில் உழுது மனித உலகம் உண்டு மகிழக்கூடிய உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து அளிக்கும் உழைப்பாளிகள் உழவர்கள்.