பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 185


உழவர்களுக்கும் அவர்கள் உழும் நிலத்திற்கும் இடையில் உள்ள உறவு எப்படி அமையவேண்டும் என்பதைத் திருக்குறள் அழகாகக் கூறியுள்ளது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள உறவுபோல அமைய வேண்டுமாம். இது வள்ளுவத்தின் கருத்து. வீடு நோக்கி வராத தலைமகனுடன் தலைமகள் ஊடி நிற்பாள்; அதுபோல நாள்தோறும் விளை நிலத்திற்கு வராத நில உரிமை யுடையானை நோக்கி நிலமகளும் ஊடி நிற்பாள்; இந்த ஊடலால் விளைபொருள் குன்றும் என்று எச்சரிக்கை செய்கிறார். விளைபொருள் குன்றும்பொழுது நிலம் வளமின்றிக் களர் நிலமாகும். உரியார் காணாத நிலம் எல்லாம் களர் நிலம் ஆயிற்றுப்போலும். நாள்தோறும் நிலத்தின் பக்கம் வாராதார் நில உரிமை பெறுதற்கு உரியரல்லர். நிலத்தை ஒருவர் உரிமையாக வைத்துக் கொண்டு அதைக் குத்தகைக்கும் வாரத்திற்கும் விடுதல் கூடாது என்று குறள் நெறி கூறுகிறது. இந்நூற்றாண்டில் பொருளியல் வல்லுநர்கள் கூறும் (Absentee Landlord) என்ற கொள்கை வள்ளுவம் கண்டு காட்டிய கொள்கை யாகும். ஆதலால் வள்ளுவம் காட்டும் பொருளியலில் அவரவர் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப உழைத்து, உரிய பயன்களைப் பெற்று வாழவேண்டும் என்ற நியதியே வற்புறுத்தப் பெறுகிறது.

உற்பத்தியாகும் பொருள்களை முறையாகப் பங்கீடு செய்வது. என்பது பொருளியலின் விதி. செல்வம் பங்கீடு இல்லாத நாட்டில் வறுமை -- வளம் என்ற வேறுபாடு இருக்கும். அவ்வழி ஒழுக்கங்கள் சிதையும்; அமைதி குன்றும். பொருள் பங்கீடு முறையை நடைமுறைப் படுத்துதல் அரசின் ஒரு நீங்காத கடமையாகும்.

"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு" (385)