பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 187


வழங்குதலும், குடியிருப்புக்கள் அமைத்துத் தருதலும் வாழ்க்கையை வளர்த்துவிடா. ஏழை மக்களைப் பொறுத்த வரையில் :இன்னும் விடியவில்லை. அதாவது நள்ளிரவில் சுதந்திரம் வந்தது. அந்தச் சுதந்திரத் தேவியின் ஒளிக் கற்றைகள் குடிசைகளில் வீசவில்லை; மாடமாளிகைகள் கூட, கோபுரங்கள் பக்கமே வீசுகிறது. இந்த நிலை மாற வள்ளுவத்தின் சமநிலைப் பொருளியல் கொள்கை நடை முறைப்படுத்தப்பெற வேண்டும். பொருளாதார சமத்துவம் இல்லாத அரசும் சமுதாயமும் அல்லலுறுதல் கண்கூடு. இங்ஙனம் அல்லலுறுதல் தவிர்க்க முடியாதது.

ஒரு நாட்டின் குடிமக்கள் ஒழுங்கு முறைகளின் வழி கடமைகளை இயற்றுதல் வேண்டும். அவ்வழி ஒழுக்க நெறியில் நிற்கும் பண்பும் தேவை. ஒழுக்கமுடைமையே குடிமைப் பண்பின் இலக்கணம். தாமாக ஒழுக்க நெறியை மேற்கொள்ளுதல் அரிது. அப்படியே ஒரோவழி முயன்றாலும் சூழ்நிலை நல்லொழுக்கத்துக்கு இசைந்ததாக அமைவது இல்லை; நாட்டின் அரசு குடிமக்கள் நல்லொழுக்கத்தை ஏற்றுக்கொள்ளத் தக்கவாறு சூழலை உருவாக்கி வழி நடத்தவேண்டும். இதனைப் புறநானூறு ‘நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே' என்று கூறுகிறது. அரசின் நடைமுறைகளும் சமுதாயத்தின் சூழலும்தான் ஒழுக்க நெறிக்குரிய அடிப்படைத் தேவை. அரசு குடிமக்களின் குற்றங்களைக்கண்டு . தண்டம் வழங்குவதற்கு முன்பு ஆராயவேண்டும். அக்குற்றங்கள் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்த தன் ஆட்சியின் குற்றங்களை ஆராய்ந்து கண்டு கொள்ளவேண்டும். . அவ்வண்ணம் ஆராய்ந்தறிந்து கொண்டு ஆட்சியின் குற்றங்களை நீக்கிக் கொள்ளுதல் அரசுக்கும் நல்லது: மக்களுக்கும் நல்லது என்று கூறுகிறது.

"தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு” (436)