பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்பது குறள். குடிமக்களிடத்தில் அழுக்காறு, அவா, வெகுளி, பகை, வெஃகுதல் முதலிய ஒழுக்கக் கேடுகள் தோன்றுதற்குரிய களம் எது? ஒரு நாட்டில் வாழும் மக்களிடையில் அருவருக்கத் தக்கவாறு வளம் -- வறுமை என்ற வேறுபாடுகள் நிலவுதல் தானே? பாவேந்தன் பாரதிதாசன்,

"பொருளாளி திருடர்களை விளைவிக் கின்றான்
பொதுவுடைமையோன் திருட்டைக் களைவிக் கின்றான்”
(பாண்டியன் பரிசு இயல் 17-2)

என்று கூறியதையும் நினைவில் கொள்க. ஒழுக்கக் கேடு திடீரென்று தோன்றுதல் இயற்கை அன்று; தோன்றாது. மனிதர்கள் நல்லவர்களாகவே பிறக்கிறார்கள். சமுதாய அமைப்பு அவர்களைக் கெட்டவர்களாக்குகிறது.

"நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு (452)

என்ற குறள் எண்ணத்தக்கது. கள்ளுண்ணல் கூடாது. கள்ளுண்பது ஒழுக்கக்கேடு, திருக்குறள் கள்ளுண்ணாமை என்றே ஒரு அதிகாரம் பெற்றுள்ளது. ஆனால் மதுவிலக்கு வெற்றி பெறத்தக்க சமுதாய அமைப்புத் தோன்றாமல் அமையாமல் மதுவிலக்கு வெற்றி பெறாது. மாறாகச் சிறைச்சாலைகனே நிறையும். உடல் உழைப்பாளிகள் தமது உழைப்பில் செலவாகும் சக்தியைத் திரும்பப் பெறத்தக்க நிலையில், ஊட்டச் சத்துள்ள உணவு கிடைப்பதில்லை. ஊதியம் குறைவு: குடும்பமோ பெரிது. பெரிய குடும்பம் வேறு அமைதியைக் கெடுக்கிறது. செலவழிக்கப்படுகிற சக்தி திரும்ப ஈடுசெய்யப்பெறாத நிலையில் சோர்வு கலளப்பு அவர்களை வருத்துகிறது. அவற்றைத் தற்காலிகமாகவேனும் மாற்றிக்கொண்டு மறக்கலாமா? தூங்கலாமா? என்று எண்ணுகின்றனர்; குடிக்கின்றனர். குடியின் பின் விளைவு உடல் நலத்தைக் கெடுக்கும் என்பதை அவர்கள்