பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 193


பிறகு சுதந்திரக் குடியரசு ஆரம்பக் கல்வியை இலவச மாக்கியது; கட்டாயமாக்கியது; படிப்படியாக உயர்நிலைக் கல்வி, கல்லூரி புதுமுகக் கல்வி வரை இலவசமாகியது. இதுபோக சமுதாயத்தில் கல்வி உரிமையையும் மற்ற உரிமை களையும் முற்றாக இழந்து, கடைகோடியிலிருந்த மக்களை முன்னணிக்குக் கொண்டு வந்து முன் வரிசையில் நிறுத்தத் தக்கவகையில், தாழ்த்தப்பட்டோர் பிற்பட்டோர் ஆகிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு உணவு -- உறையுள் உதவிப் பணம் வழங்கிக் கல்லூரிப் பட்டப்படிப்பு, மேற்பட்டப்படிப்பு வரை கற்க வாய்ப்பு வழங்கப்பெற்று வருகிறது. சுதந்திரக் குடியரசின் இந்தச் சாதனைகள் மறக்க முடியாதன; மறுக்க முடியாதன. மேலும் மேலும் வழிவழியாகத் திருக்கோயில்கள் எடுத்து அறம் செய்த தனவணிகர் குடும்பத்தைச் சேர்ந்த செட்டிநாட்டரசர் அவர்கள் ஒரு பல்கலைக் கழகத்தையே அமைத்துக் கல்விக்கொடை வழங்கிவருவதை நெஞ்சுநெகிழ்ந்த உணர்வுடன் பாராட்டுகின்றோம். கல்வித் திட்டங்கள் இவ்வளவு சீர்மையாக அமைந்திருப்பினும் நடைமுறையில் குறைகள் இல்லாமல் இல்லை. இக்குறைகள் ஆட்சியினிடத்தில் பெரும்பாலும் இல்லை. அரசு, தன் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அமைத்துக்கொண்டிருக்கிற உறுப்பு களில் நிர்வாக எந்திரத்தில் உள்ள குறைகளே யாகும். எல்லாச் சிற்றூர்களிலும் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும் பள்ளிக்கு வரவேண்டிய வயது வந்த அனைத்துப் பிள்ளைகளும் பள்ளிக்கு வந்துவிட்டார்களா? என்று ஆண்டுதோறும் அரசு கேட்கிறது. அவர்கள் முறையான கணக்கெடுத்துக் கொடுக்காமல் 'ஆம்' என்று தவறான தகவல் தருகிறார்கள். ஆனால் உண்மையில் கிராமங்களில் பள்ளிக்கு வரவேண்டிய வயதுவந்த குழந்தை களில் குறைந்தது பத்து விழுக்காட்டினர் பள்ளிக்கு வராமல் இருப்பார்கள் என்றே நாம் நம்புகின்றோம். மற்றக் குழந்தைகள் பள்ளிக்கு வருவது மட்டுமன்று, பள்ளியில்