பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தொடர்ந்து சீராக ஐந்தாம் வகுப்பு வரையிலாவது கற்க வேண்டும். இதற்குரிய சூழல் இன்னமும் கிராமங்களில் தோன்றவில்லை. இன்றைய சூழ்நிலையில் கல்விப் பரம்பரை பெரும்பாலோருக்கு இல்லை. சுற்றச் சூழ்நிலைகளும் மோசம். ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர் -- மாணவர் விகிதாசாரமோ, கற்பிக்கும் விதிகளுக்குப் புறம்பாக அமைந்துள்ளது. ஆரம்பப் பாடசாலைக்கு நியமிக்கப்பெறும் ஆசிரியரின் கல்வித்தரமோ சொல்லித் தெரியவேண்டியதில்லை. கல்வியின் அடிக்கல்லாக விளங்கும் ஆரம்பக் கல்வியில் நாமும் நம் அரசும் செலுத்தும் அக்கறை போதாது. அதன் காரணமாக எவ்வளவுதான் வாய்ப்புகள், வசதிகள் இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கல்விப் பயணத்தில் இடையில் நின்று போகிறவர்கள் எண்ணிக்கையே மிகுதி. கல்விப் பயணத்தில் இடைமுறிவுகளைத் தவிர்த்தால்தான் வருங்கால வரலாறு சிறப்புறும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'கற்க' என்றார் வள்ளுவர். கற்க என்றால் எந்தவித சமாதானமும் கூறாமல் கற்க என்பதே கருத்து. கற்பதற்குரிய வசதிகளை அமைத்து வழங்கவேண்டிய பொறுப்பு அரசினுடையது என்றே வள்ளுவம் கூறுகிறது. மேலும், கல்வியைச் சாதி, இனவேறுபாடின்றிப் பொதுமையாக்கிய பெருமையை எண்ணிப் பாராட்டுதல் வேண்டும். திருக்குறள் அரசியலில், சமாதானம் வற்புறுத்தப்படுகிறது. போருக்குக் காரணமாகிய பகையைத் தவிர்க்க வேண்டுமென்று ஓர் அதிகாரம் எடுத்துக் கூறுகிறது. 'இகல்' என்ற அதிகாரத்தில் பகைவாராமல் தவிர்க்கவேண்டும்; புகை வருவதற்குரிய சூழ்நிலைகள் தோன்றினாலும் தவிர்த்தல் வேண்டும்; அங்ஙனமே வந்துவிட் டாலும் மாறுகொண்டு பகை வளர்க்காது ஒதுங்கிப்போக வேண்டும் என்றெல்லாம் சமாதான வாழ்க்கைக்கு வழி காட்டப்படுகிறது. ஆம், உலக வரலாற்றுப் பக்கங்களில் பாதியைப் போர் விழுங்கிக் கொண்டிருக்கிறது. புகழ்பூத்த