பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 195



தமிழகத்தின் வரலாற்றைத் தமிழரசர்கள் தம்முள் பொருதியே அழித்தனர்; அழிந்தனர். தமிழகத்தின் மூன்று பேரரசு களிடையே ஒருமைப் பாட்டை உண்டாக்கச் சங்ககாலச் சான்றோர்களாகிய கோவூர்கிழார், காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார், ஒளவையார் முதலியோர் செய்த முயற்சிகள் முழுமையாகப் பயனளிக்க வில்லை. சமாதானத் தூதுவராகக் கோவூர்கிழார் பாடியபாட்டு பாருள்ளளவும், மனித உலகம் உள்ளளவும் நிற்கும்.

     "இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்
     கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
     நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
     பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
     ஒருவீர் தோற்பினும் தோற்பது உம்குடியே
     இருவீர் வேறல் இயற்கையு மன்றே ;அதனால்
     குடிப் பொருளன்றுறும் செய்தி கொடித்தேர்
     தும்மோரன்ன வேந்தர்க்கு
     மெய்யமலி உவகை செய்யும்இல் விகலே" (புறம் 45)

என்பது அவர் பாடல். இப்பாடல் கற்பிக்கும் பாடத்தை இன்றுவரை தமிழர்கள் உணரவில்லையே. அன்று 1800 ஆண்டுகட்கு முன் நாவடக்கமில்லாது பெரிய வடபுலத்து மன்னர்களைப் போலவே தமிழினத்தை இழித்தும் பழித்தும் பேசிக் கொடுந் துன்பங்களை விளைவித்தவர்களிடம் தமிழ்த்தலைவர்கள் தம்முள்ளிருக்கும் மாறுபாட்டைத் திருத்திக்கொள்ளாமல் சார்தலும் அவ்வழி தமிழினத்திற்கு அழிவினைத் தேடிக்கொள்ளுதலும் இன்றும் நிகழ்கின்றன. இளங்கோவடிகள், மூவேந்தரை ஒருமைப்படுத்தவே சிலப்பதிகாரம் இயற்றினார். ஆனால் அவரது முயற்சியைச் செங்குட்டுவனே முறியடித்து விட்டான். முன்பு மூவருள் ஒருவனாக விளங்கிய செங்குட்டுவன்,

     "இமயத் தாபதர் எமக்குஈங்கு உணர்த்திய
     அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி"