பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஆதலால் போரில் காலம், பொருள், ஆற்றல் செலவழிப்பது திருக்குறளுக்கு உடன்பாடன்று. போரைத் தவிர்த்தலே திருக்குறளுக்கு நோக்கம். போர் தவிர்க்க முடியாததாகிவிட்டதா? அப்படியே போர் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டால் வலிமையுடையாருடன் தான் போர் செய்யவேண்டும். வலிமை இல்லாதார் மேல் போர் தொடுத்தல் கூடாது. வியட்நாமுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன ஒப்புமை இருக்கிறது? இத்தகைய போர்கள் சால்பில்லாத போர்கள் என்பதை வள்ளுவம் அன்றே உணர்த்தியிருக்கிறது. மெலியார்மேல் போர் தொடுத்தால் சான்றாண்மை சறுக்கும்; சீலம் சீரழியும். தம்மின் வலியார்மேல் போர்தொடுத்தால் தமக்கே அழிவு வந்துறும். ஆதலால் "பகைத்திறம் தெளிதல்", "பகைமாட்சி" என்றெல்லாம் ஓதிப் போர் தொடுத்தலுக்கும் கூட நெறிமுறைகள் கூறும் திருக்குறள் சமாதானத்தையே விரும்புகிறது. உலக நாடுகளிடையே சமாதானக் கொள்கை பொதுக்கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பெறுதல் வேண்டும். உலக நாடுகள் படைக் குறைப்பு ஒப்பந்தங்களை இயற்றிக்கொண்டு நடைமுறைப்படுத்தவேண்டும். அங்ஙனமின்றி ஒருநாடோ அல்லது சில நாடுகளோ படையைக் குறைத்துக் கொள்ளுதல் இயலாது. "படைக்குறைப்பு” என்பது எல்லா நாடுகளும் மனம் ஒப்பிச் செய்யவேண்டிய ஒன்று. இன்று உலக வல்லரசுகளில் சமாதானப்பேச்சு ஒருபுறம் நடக்கிறது; படைப்பெருக்கமும் ஒருபுறமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வளர்முக நாடுகளில் ஒன்றாகிய நமது பாரதமும் பாதுகாப்புக்கு, படைப்பெருக்கத்திற்குப் பலநூறு கோடிகளைச் செலவழிக்கிறது. இன்றைய உலகச் சூழ்நிலையில் கிழக்காசியா - இந்து மாக்கடல் பகுதிகளில் நிலவும் போர்ப்பதட்ட நிலையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் நமது படைச்செலவு தவிர்க்கமுடியாதது; தவிர்க்கக் கூடாதது. உலக வல்லரசுகளின் மனச்சான்று நன்றாக இல்லை. ஆதலால்