பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பகைநாடென அறிவிக்கப்பட்ட நாட்டுக்கும் படைக்கருவிகளைக் கொடுத்தல், நமக்குத் தராதிருத்தல், இவ்விரு நாடுகளுக்கிடையே போர் நடப்பதை விரும்புதல் போன்றவை நட்புறுப்பு நாடுகளுக்கு இலக்கணமல்ல. வள்ளுவம் கூறும் நட்பில் நாட்டுறுப்பு நட்பு நிலைமை உய்த்தறிந்து இசைந்தவாறு பொருள் கொள்ளுதல் வேண்டும். அடுத்து அரசுக்கு அமைந்த அமைச்சர்கள் நெருங்கிய நட்பினராதல் இயலாது. நெருங்கிய நட்பினராய் அமைச்சர்கள் ஆகிவிட்டால் நல்ல அமைச்சராகவும் இருக்க இயலாது. நட்பு உவப்பன கூறி, உவப்பன செய்து, நெறிப்படுத்தி உடன் வாழும் இயல்புடையது. உடன் வாழ்தல் என்பது உணர்வின் வழியது என்பதை அறிக. தெளிவாகச் சொன்னால் ஒரு தலைமகனுக்குக் காதல் வழியமைந்த தலைவியை விடவும் நட்புச் சிறப்புடையது. அதனால் அன்றோ வள்ளுவம்.

"செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு" (781)

என்று இயம்புகிறது. சிறந்த நட்பு, செய்யும் செயல்களுக்கெல்லாம் பாதுகாப்பு என்று திருக்குறள் ஐயத்திற்கிடமின்றிக் கூறுகிறது. ஒரு ஆட்சித் தலைவனின் செயல்களை அவனுக்கு உடனாக நின்று சோர்வின்றித் திருத்தமுற நடத்தித் தருவது நட்பு. அவனுக்கு வேறாக நின்று அறிவுரைகள் வாயிலாகச் செப்பமுறச் செயற்படுத்துவது அமைச்சு. ஆதலால் ஆட்சித் தலைவனின் மிகச் சிறந்த உறுப்பாகிய நட்பை ஆட்சியின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாய் அமையக்கூடிய நட்பை, ஆராய்ந்து கொள்ளுதல் வேண்டும் என்ற எச்சரிக்கையைச் செய்ய "நட்பாராய்தல்" என்றே ஓர் அதிகாரம் அமைக்கப் பெற்றுள்ளது. "அமைச்சு ஆராய்தல்” என்றொரு அதிகாரம் இல்லாததை அறிக. நட்பு நெஞ்சுக்கு நெகிழ்ச்சி தருவது; மனத்தை இன்புறுத்துவது.