பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 209


நெகிழ்கிறது. நெகிழ்ந்து கீழே விழுந்துவிட்டது. உடனே உடலின் மற்ற உறுப்புகள் சிறப்பாகக் கைகள் உடையை இழந்த இடையைக் கண்டு நகைத்துக் கைகொட்டிச் சிரிப்பதில்லை. அல்லது அந்தச் சூழ்நிலையில் கண்பார்த்து மூளைக்குத் தகவலைத்தந்து ஆணை வரவேண்டுமென்று கைகள் காத்திருப்பதில்லை. அல்லது உடையை இழந்த இடை வாயின் துணைகொண்டு ஆடை வேண்டுமென்று இரந்து கேட்க, அந்த ஒலியலை செவிப்புலன் வழியாக மூளைக்குச் சென்று முளை ஆணை பிறப்பிக்கவேண்டும் என்றும் காத்திருப்பதில்லை, ஏன்? உடையை இழந்த இடையை இடைசார்புடைய மானத்தைக் காப்பாற்ற ஆடையைக்கூட உடனடியாக நம்பி நகர்வதில்லை. இடர்ப்பாடுற்ற சூழ்நிலையில் முதல் உதவி செய்யும் செயல்முறை திருக்குறள் காலத்திலேயே நடைமுறையில் இருந்ததுபோலும், உடையை இழந்தது முன்பா? கைகள் விரைந்து துணை செய்தது முன்பா? என்று கால ஆராய்ச்சி செய்யத்தக்க வகையில் கைகள் விரைந்து சென்று மறைக்க வேண்டிய பகுதியைக் கைகளே மறைத்துத் துணைசெய்கிறது. அதன்பிறகுதான் முறையாக உடலுறுப்புகள் இயங்கி உடையும் வந்துசேரும். சிறந்த நட்பும் இத்தகையதே. சிறந்த நண்பன் நட்புச் செய்யப்படுபவரின் நெறி பிறழ்ந்த நிலையை முதலில் சென்று மறைப்பான்; பின் அறிவுறுத்தி அவனை நெறியில் நிறுத்துவான்.

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு" (788)

என்ற திருக்குறள் நட்பு செயற்படுமாறு காட்டுவதாகும்.

இத்தகைய நட்பு நாட்டின் ஆட்சித் தலைவர்களுக்குத் தேவை. இன்றைய சமுதாயம் இத்தகைய நண்பர்களை வழங்குமா? வழங்க வேண்டும். ஆட்சியின் சிறப்புக்கு நல்ல குடிமக்கள் தேவை. நற்குடி மக்கள் அமைய நல்லாட்சி தி-lկ-.