பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒரு நாட்டுக்கு வளத்தையும் பெருமையையும் சேர்ப்பவர்கள் அந்நாட்டுக் குடிமக்களேயாவர். சிறந்த குடிமக்கள் அமையாத நாட்டில் இயற்கை யமைவுகளைக் கூடப் பயன்படுத்தாமல் துன்புறுவர். அதனால் வள்ளுவம் காட்டும் குடிமைப் பண்புகளை இந்திய நாடு முறைபிறழாது நடைமுறைப் படுத்துமானால் புரட்சியில் வளர்ந்த நாடுகளை விடவும் மேலான சிறப்படையக்கூடும்.

ஒரு நாட்டு அரசியல் சிறப்பாக அமைய நல்ல நாடு அமையவேண்டும். நல்ல நாடு அமைய நல்லாட்சி வேண்டும். இதில் எது முதலில் அமையவேண்டும்? இதில் முதல்நிலைத் தகுதியுடையது நன்மக்களும் நல்லாட்சியுமேயாம். நாட்டுக்கென்று தனி இயல்பில்லை, அதற்கென்று இயல்புகளைச் சேர்ப்பது மக்களும் ஆட்சியுமேயாம். இதனை,

"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே” }} (புறம். 187)

என்ற புறநானூற்றுப்பாடல் வழி அறிக.

ஒரு சிறந்த நாட்டுக்கு முதல் இலக்கணம் வறுமை யின்மைதான். "பொன் வேண்டேன், பொருள் வேண்டேன்" என்று பாடிய மாணிக்கவாசகரும்கூட வறுமையை "நல் குரவு என்னும் தொல்விடம்" என்று குறிப்பிடுகிறார். வறுமையிற் கொடுமை எது? என்று வினவுகிறார் திருவள்ளுவர்.

"இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது" (1041)

என்பது குறள். "நெருப்பினுள்ளும் தூங்கலாம். ஆனால் வறுமையோடு வாழ்தல் அரிது” என்று வள்ளுவம் கூறுகிறது. நேற்று வறுமை இருந்திருக்கலாம். ஆனால் இன்றும்