பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பூசாரிக்குப் பணப்பெட்டி நிறைய வேண்டும். அவர் வல்லார் பக்கம் சார்ந்து மாட்டாதாரை ஒதுக்கி வல்லாரின் செல்வக் குவிப்புக்குக் கடவுளைக் காட்டி நியாயம் கற்பித்துக் கொழுத்து வளர்கின்றார். கடவுள் நம்பிக்கையுடயோரின், நீதிக்குப் புறம்பான இச்செயல்தானே, நாத்திகத்தைத் தோற்று வித்தது? கடவுள் நெறி தோன்றிய பிறகும் "இன்றும் வருவது கொல்லோ?" என்றால் கடவுள் நெறி எதற்காக? அது கிடக்கட்டும். தமக்கு எவ்வளவுதான் பற்றிருந்தாலும் கடவுள் நெறியின் வழியும் கடவுள் தன்மையுடைய நீதியின் சார்பிலும் இயங்க மனமில்லாமல் கடவுளுக்கு அர்ச்சனைகள் செய்து கொண்டே கடவுள் தன்மைக்கு மாறான செயல்களே நடைபெற்றன. அதனால் அரசியல் நெறியைக் கண்டோம். மனிதர்களின் உறவுகளுக்கும், பொருளியல் நெறிகளுக்கும் ஒழுங்கு முறைகளைக் கண்டோம். வல்லார்க்கும், மாட்டார்க்கும் ஒத்த வாய்ப்புகளும், வாழ்வும், நியாயமும், நீதியும் வழங்கவே அரசியல்முறை தோன்றியது. அது தோன்றியும் என்னாயிற்று? அரசியல் வாய்ப்புடையார் வீட்டின் வாசலில் காத்துக்கிடக்கும் சேவகத் தொழில் செய்வதாக மாறிவிட்டதே! எங்கு நாட்டின் நிதியியலை முறைப்படுத்தி நிர்வகிக்கின்ற அரசு தோன்றவில்லையோ, அங்கு அரசை ஆட்டிப் படைக்கின்ற தனியார் நிதிக்குவியல் தோன்றும் என்ற சிந்தனைக்குரிய வாக்கு நினைவிற் கொள்ளத்தக்கது. அதனாலன்றோ முறையான நிதியியல் ஆட்சியியல் நடத்தாது நாட்டில் வறுமையாளர்களை வளர்த்து மக்களை இரந்து வாழ்பவர்களாக ஆக்கும் அரசு 'பரந்து கெடுக' என்றது. வள்ளுவம்.

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்” (1062)

என்பது குறள். இங்கு "இயற்றியான்" என்ற சொல் கடவுளைக் குறிக்காது. கடவுள் என்பது குணமேயாம்; குணியன்று. பண்பேயாம், பண்பியன்று. "இயற்றியான்”