பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 217


என்பதால் குணங்களாகவே விளங்கும் கடவுளைக் குறிக்காது அரசையே குறிக்கும். நாட்டை வளமுள்ள நாடாக ஆக்க வேண்டும். நம்முடைய தேவைகளை நிறைவு செய்யும் நாடாக வளர்க்க வேண்டும்; தம் தேவைகளுக்கு அயல்நாடுகளை நோக்கிச் செல்லாதவாறு தன்னிறைவுடைய நாடாக்க வேண்டும் என்பார்.

"நாடென்ப நாடா வளத்தன; நாடல்ல
நாட வளந்தரும் நாடு” (739)

என்று வள்ளுவம் கூறும். நாட்டில் மக்கள் தாழ்விலாச் செல்வராக விளங்கவேண்டும். தாழ்விலாச் செல்வர் என்பது அருமையான குறிப்புச் சொல். குடிமக்கள் பெற்றிருக்கிற செல்வம், அவர்கள் திறனுக்குத்தக்கவாறு அமையவேண்டும். அவர்களுடைய உழைப்புத் திறனால் படைத்துக் குவிக்கப்படும் செல்வம், மற்றவர்களால் கொள்ளை போகக்கூடாது. திறனுக்கேற்ற செல்வம்; செல்வத்துக் கேற்றதிறமை; தராசில் நிற்பதுபோல் ஒருபால் கோடாது நிற்க வேண்டும். செல்வத்திற்கேற்ற திறனில்லாது போனால் சுரண்டுமுறை, அதாவது பிறர் பங்கைத் திருடி வைத்துக் கொள்ளும் முறை அங்கு உள்ளது என்பது பெறப்படும். எனவே வள்ளுவம் படைக்கும் நாட்டில் தாழ்விலாச் செல்வரே இருப்பர். அங்குத் திறனுக்கு ஏற்ற செல்வமும் கிடைக்கும்; செல்வத்துக்கேற்ற திறனும் அமையும். இத்தகைய நாடே நாடு.

திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மூதறிஞர்; அறநெறியாளர்; அரசியல் சிந்தனையாளர். அவர் கண்டு காட்டியுள்ள அரசு ஒட்பமும் திட்பமுமுடைய அரசு. அவரது அரசியல் சிந்தனைகள் இன்றைக்கும் எதிர்வரும் காலத்திற்கும்கூட நன்மை தருவன. திருவள்ளுவர் வழியில் இந்த நாட்டை அமைத்து வழி நடத்த முயன்றிருந்தால் பிரெஞ்சு புரட்சிக்கும் சோவியத் புரட்சிக்கும் முன்னோடியாகத் தமிழகத்தில் சமுதாயப்புரட்சி