பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தோன்றியிருக்கமுடியும்; ஆனால் அந்த நல்லூழ் இந்த நாட்டுக்குக் கிடைக்கவில்லை. வள்ளுவம் தோன்றிய காலத்தில் இலைமறை காயாகவும் அதற்குப் பிறகு வெளிப்படையாகவும் செழுந்தமிழ் வழக்காகிய வள்ளுவம் மறந்து போகும் அளவுக்கு அயல்வழக்குப் புகுந்து ஊடாடியது. மார்க்சுக்கு லெனின் கிடைத்ததைப்போல வள்ளுவத்திற்குச் சரியான செயல் மாணாக்கர்கள் கிடைக்கவில்லை. பரிமேலழகர் முதல் இன்றுவரை உரைவிரிக்கும் மாணாக்கர்களே இருந்து வருகின்றனர். வள்ளுவத்திற்கு வரலாறு படைக்கும் மாணாக்கர்கள் கிடைக்கவில்லை; பின்பற்றுவோர் கிடைக்கவில்லை. இன்றும் தமிழ்நாட்டில் படிக்கும் நூலாக, உரைவிரித்துரைக்கும் நூலாக, பட்டிமன்றத்திற்குரிய நூலாகத் திருக்குறள் விளங்குகிறதேயன்றி அஃதொரு அரசியல் நூலாக, ஓரினத்தை வழி நடத்தும் நூலாக இடம் பெறவில்லை. குருநானக்கின் சீக்கிய வேதம் இன்று பாஞ்சாலத்து மக்களை வழி நடத்தும் மறை; சட்டமும்கூட அதுதான். அந்தச் சட்டத்திற்கு முரணில்லாமல்தான் இந்திய அரசியற்சட்டம் செயற்படவேண்டும். இது அவர்கள் பெற்ற வெற்றி. முகமதியரும் அத்தகைய வெற்றி பெற்றுள்ளார்கள். கிறித்தவர்களும் வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்கள் மறைவழிதான் அவர்கள் வாழ்க்கை. ஆனால் தமிழ் மக்கள் தம்மை இழிநிலையில் கற்பித்துக்கூறும் இந்து சட்டத்தின் வழிதான் இன்று வழி நடத்தப்படுகிறார்கள். வள்ளுவத்தின் வழியில் அல்ல என்பதை உணர்க.

தமிழினம் தன் தனித் தன்மையைப் பாதுகாத்துக் கொள்ளுதல் உலகத்தின் பொதுமைக்கு இடையூறன்று. தனித்தன்மை எதனோடும் இசைந்து வாழும். ஆனால் கலப்பு, தீமையைத் தரும். ஆதலால் வள்ளுவத்தின் வழியில் அறநெறியில் நல்லாட்சி கண்டு உலகிற்கோர் புதிய சமுதாயமாய் நாம் வாழத் தலைப்படவேண்டும். இதுவே வள்ளுவத்தைப் போற்றும் முறை.