பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 221


வாழ்க்கைக்குரிய இன்றியமையாத தேவைகளை மனிதன் பெற்றுவிட்டால், இக்குறைகள் குறையும்-இல்லாமலே கூடப் போகலாம். மேலும், செல்வ உலகத்தில் அருவருக்கத் தக்க வகையில்-விபத்துக்களை உண்டாக்கக் கூடிய வகையில் மேடு பள்ளங்கள் இருப்பதும் குறைகளை வளர்க்கத் தக்க சூழலே. ஆதலால் எல்லோரும் எல்லாச் செல்வங்களும் உடையவர்களாக வாழும் சூழல் அமைந்த சமநிலைச் சமுதாயம் அமைய வேண்டும். இத்தகு சமுதாயத்தை, இருப்பதை விநியோகிப்பதன் மூலம் அமைக்க முடியாது. இம்முறையில் வறுமையைத்தான் பங்கிட முடியும். எனவே, வளத்தைப் பெருக்கும் முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும். இவ்வாறு வளத்தைப் பெருக்கும் முயற்சியில் மனித குலத்திற்குத் துணை நிற்க வேண்டியது-துணை நிற்பது மழையேயாகும். மழையின்றேல் மண்ணில் வளமில்லை. ஊற்று வளமும் குன்றும். இதன் பயனாக வறுமையே தோன்றும். பசிப்பிணியால் உந்தப் பெற்ற மக்கள் ஒழுக்கக் கேடான செயல்களிலும் ஈடுபடுவார்கள், ஆதலால், மனிதகுல ஒழுக்கத்திற்கு மழையே இன்றியமையாதது என்கிறார் திருவள்ளுவர்.

"நீரின் றமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு" (20)

என்பது திருக்குறள். இக் குறட்பாவை மேற்கூறியவாறு சிந்தனை செய்யாமல், "வான் இன்றி மழையில்லை" என்று பொருள் காண்பது நிறைவாகாது.

மேலும், ஒழுக்கச் சூழல் காண, குளித்தலும் தண்ணிர் குடித்தலும் அவசியமாகும். மனித உடலின் வெப்ப நிலை அதிகமாகும் சூழ்நிலை ஒழுக்கக் கேடுகளையும் விளைவிக்கிறது. உடலின் வெப்பநிலையை அளவோடு வைத்துக்கொள்ளத் தண்ணிரில் குளித்தலும், தண்ணீரைக் குடித்தலும் அவசியம். அதனாலன்றோ உடல்நலம் பற்றிய நூல்கள்