பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நூல். வாழும் மனிதனுக்குத் துறைதோறும் கடமைகளுண்டு. சில துறைகளைத் திருவள்ளுவரே எடுத்து விளக்குகின்றார். உழைப்பையே உயர்துணையாகக் கொண்டு பொருள்பல செய்து குவித்துப் பகுத்துண்டு பல்லுயிரோம்பி வாழ்தல், வாழ்வாங்கு வாழும் நெறியாகும். இங்ஙனம் பொதுவகையாக மட்டும் கூறாமல் பகுதி பிரித்தும் கூறுகிறார்.

"துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை." (42)

துறந்தார் என்பவர் யார்? கனிந்த கனியென உள்ளத்தாற் பழுத்து யாதொரு பற்றுமின்றிப் புகழ் இதழ்களில் நாட்டமின்றிப் பழுத்த மனத்தடியாராக வாழ்பவர்களே துறவிகள். அவர்கள் உள்ளம் கருணையின் ஊற்று; நாடெலாம் வாழக் கருதும் பேருள்ளம். அவர்களைப் பாதுகாப்பது நாட்டின் பாதுகாப்பாகும்; மனையறத்தின் மங்கலத்திற்கு அரணாகும். துறந்தாரோ உரிமையுடையதென யாதொன்றையும் பெற்றிலர்; ஒடும் பொன்னும் ஒக்க நோக்கி வாழும் சீலமுடையார் கந்தை ஆடையும் மிகையெனக் கருதுவோர். ஆதலால் அவர்களுக்காக அவர்கள் நலங்கருதி, மனையறம் நிகழ்த்துவோர் பணி செய்தல் பாங்காகும். இந்தத் திருக்குறள் நெறியையே திருத்தொண்டர் புராணம் விளக்கி அருளுகிறது.

அடுத்துப் பேணத் தக்கவர் "துவ்வாதவர்". திருவள்ளுவர் துவ்வாதவர் என்ற ஓரினத்தைப், பேணுதற்குரியவராக விளக்கி அறம் வகுத்தல் மிக உயர்ந்த பெருநெறியாகும். உயிர்களின் இயற்கை துய்த்தலாகும். உயிர்கள் துப்பானவற்றைத் துய்த்து வேட்கை தணிந்துழியே நலமுறுகின்றன. இதுவே சமயத்தின் அடிப்படை நியதி. துய்த்து அனுபவிக்கப் பிறந்த உயிர்களுக்குத் துய்ப்பன வழங்காமல் ஏழ்மையில் அவலமுறச் செய்துவிட்டு துய்க்கும் நெறிக்கும் அப்பாற்பட்ட இறைவன் முன்னே துய்த்தற்குரிய பொருள்