பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வற்றைத் தேடிப் பெறுதற்குரிய கருவிகளாகிய பொறிகளோ இல்லை. புலன்கள் எண்ணும், கற்பனை செய்யும்; ஆசைப்படும். ஆனால் தாமே அடைதற்குரிய ஆற்றல் அவர்களுக்கில்லை. ஆதலால், அந்த உயிர்களின் துய்ப்பு நலன்களைப் பாதுகாப்பது இல்வாழ்வோரின் கடமையாகிறது.

"இறந்தார்" என்ற சொல்லில் உள்ள றகரத்தை இடையின ரகரமாகக் கொண்டாலும் யாப்பில் பிழையில்லை. அப்படி "இரந்தார்” என்று கொண்டால் யாதொரு பற்றுக்கோடுமின்றி - உடலில் உறுப்புக் குறையினராக உடற் தொழிற்பாடு செய்ய முடியாமல் பிறரை நோக்கி வாழ வேண்டிய நிலையில் இராது நிற்பாரைக் குறிக்கும்.

இன்றைய உலகில் இரப்பாரினம் கண்டு கொள்ள முடியாமல் குழம்பிக் கிடக்கிறது. யாதோர் உடற் குறையுமின்றி உழைப்பிற்கேற்ற முழுத் தகுதியுடையதாய் உடல் விளக்கமுற இருந்தும் கருவி கரணங்கள் யாதொரு பிழையுமின்றி இயங்கினாலும் உழைக்கும் சுபாவம் இன்மையின் காரணமாக இரந்து வாழ்கின்ற “சுகவாழ்வினர்" பலரைச் சந்திக்கிறோம். மனத்தால் துறவாது துறவை வாழ்க்கையின் வாயிலாகக் கருதி மேற்கொண்டோர் பலரும் இரவலர்களாக ஆங்காங்குத் திரிவதைப் பார்க்கின்றோம். துறவி இரக்க மாட்டான்.

துறவி இரவலன் ஆதல் இடும்பைக்கு வழி வகுக்கும். உடல் கட்டுக்கோப்புடையவன். அந்தப் பெயரைச் சொல்லி அழைக்காமல் ஏய்த்து வாழ்ந்தாலும் இரத்தலோடொக்கும். ஆனால் இத்தகையோரை இரவலர் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. நல்லூழின்மையின் காரணத்தாலோ அல்லது இயற்கையின் கொடுமையினாலோ உடற்குறை யுடைய ராயிருப்போரே இரவலர் ஆவர். அவர் தமக்குங்கூட என்றும் இரந்து வாழ்தல் ஏற்ற நெறியன்று. இரத்தல் வாழ்க்கைக்காக