பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 231


"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (1001)

என்றார் திருவள்ளுவர்.

பெய்யும் மழை

தெய்வம் தொழாஅள் கொழுநற் றோழுதெழுவாள்' என்ற திருக்குறள் இன்றைய யுகத்தில் விவாதத்திற்குரிய குறளாக இருக்கிறது. சிறந்த கற்புடைய பெண்ணுக்கு இலக்கணம் வடித்துத் தருவது இந்தக் குறள். ஒருவருக் கொருவர் நம்பிக்கையும் கடமைப்பாடும் தாங்கியதே நல்வாழ்வு. இந்த உயரிய வாழ்க்கை நெறியில் உலக மனித சமுதாயம் செல்லும்வரை இன்பமே; எந்நாளும் துன்ப மில்லை. கணவனுக்கு மனைவி நம்பிக்கைக்குரியவளாக இருக்க வேண்டும். மனைவிக்குக் கணவன் நம்பிக்கைக்குரிய வனாக இருக்க வேண்டும். நண்பனுக்கு நண்பன் நம்பிக்கைக் குரியவனாக இருக்கவேண்டும். ஏவல் கொள்வோர் - ஏவல் செய்வோர் இவர்களுக்கிடேயேயும் நம்பிக்கை நிலவ வேண்டும்; கடப்பாட்டு நெறி உயிர்ப்போடிருக்க வேண்டும். இந்நெறிமுறை பிறழும் காலங்களிலெல்லாம் மனித உலகம் துன்பத்தால் சூழப்படுகிறது. பெண்ணினத்துக் கற்பை மட்டும் பெரிதுபடுத்தியதற்குக் காரணம், பெண்ணிடத்து நம்பிக்கை மோசம் ஏற்படும்பொழுது, ஏற்படும் ஏமாற்றமும் பகையும் அளத்தற்கரியதா யிருப்பதேயாகும். நிலப் பிரபுத்துவ சமுதாயமும், தனியுடைமை ஆதிக்கமும், பெண்ணடிமைத் தனமும் பரவலாக இருப்பதன் காரணமாகப் பெண்ணின் ஒழுக்கக்கேடு மட்டும் பெரிதுபடுத்தப்படுகிறது. அதனால், மற்ற இனத்திற்குத் தேவையில்லையென்று கொள்ளக் கூடாது. ஆதலால் மனித சமூகத்தின் எல்லா உறவுகளிலும் நம்பிக்கையும் கடமைப்பாட்டுணர்வும் நிலவ வேண்டும்.