பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இலட்சியம் துன்பங்களினின்றும் விடுதலை பெறுதல். பிறப்பு இறப்புச் சுழற்சியினின்றும் நீங்கி திருவருட் சார்பு பெறுதல். இந்நோக்கத்தை நோக்கிப் பயணம் செய்யும்போதே, பிற உயிர்களுக்குத் தொண்டு செய்தலும் இணைக்கப் பெறுகிறது. மனையுறத்தில் தலைவன், தலைவியாக இருந்து ஒருவருக்கொருவர் உதவி, இன்பம் பெற்று வாழ்தல் அமைப்பு.

இந்த அமைப்பிலேயே, இலட்சிய உணர்வோடு கூடிய வாழ்வியற் பயணம் செய்ய உதவும் மனித உடம்பைப் பெறாத உயிர்களுக்கு-துணை செய்யக் கூடிய மனித உடம்பைப் பெறாமல் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் உயிர்களுக்கு மனித உடம்பைத் தந்து உதவி செய்யக்கூடிய அரிய சாதனமாகவும் மனைவாழ்க்கை பயன்படுகிறது. ஆதலால், மனைவாழ்க்கையைச் சாதாரண ஒன்றாகக் கருதாமல் அதையே 'தவம்' செய்யும் சாதனமாகக் கருதிப் பயன்படுத்தினால் அறிவறிந்த மக்கட்பேறு கிடைக்கும்.

திருஞானசம்பந்தரை ஈன்றெடுத்த குடும்பம் மனையறத்திலேயே தவம் செய்த குடும்பம். சிவநெறி வளர்க்கும் திருப்பிள்ளை வேண்டும் என்ற குறிப்பிட்ட குறிக்கோளோடு தவம் செய்தே அவர்கள் அப்பேற்றினைப் பெற்றார்கள். இத்தகு நோன்பினை எல்லாக் குடும்பங்களுமே நோற்க வேண்டும்.

திருவள்ளுவர் அறிவறியும் மக்கட்பேறு என்று கூறாமல் 'அறிவறிந்த மக்கட்பேறு' என்று கூறியமையான், "தந்தை தாயாரின் முயற்சியால் கருவிலேயே அறிவறிந்த” என்ற குறிப்பினை உணர்த்துகின்றார். கருவிலே அறிவுடையவர்கள் -இளமைப் பருவத்திலேயே-குழந்தைப் பருவத்திலேயே கூர்ந்த மதியுடையராகத் திகழ்கின்றார்கள். திருஞான சம்பந்தர் தம் மூன்றாவதாண்டிலேயே திருநெறித் தமிழைப் பாடியது நினைவு கூரத்தக்கது.