பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 237


கவிஞன் பாரதியும், பிறப்பிலேயே கம்பன், வள்ளுவன், இளங்கோ போன்றவர்கள் கருவிலேயே அறிவுடையர் என்று குறிப்பிடுகின்றார். இதனையே வள்ளுவர்,

"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற." (61)

என்ற குறட்பா வாயிலாக உணர்த்துகின்றார்.

வெய்யிலும் அறமும்

காய்கதிர்ச் செல்வன் ஆக்கத்தின் சின்னம். இருள் நீக்கி ஒளி தருவது கதிரொளி; மடிநீக்கி ஏற்றத்திற்குரிய எழுச்சியை ஈவது ஞாயிறு. செந்நெல்லும் செங்கதிரும் பயனுறச் செய்வதும் செங்கதிரோன் ஒளியே யாம்! எழுகின்ற ஞாயிற்றின் ஒளி இருள்நீக்கும்-ஒளி பெருக்கும்-உறுதி பயக்கும்-வாழ்வளிக்கும்! எனினும், எலும்பில்லாத புழுக்களை அது தாக்கி வருத்தும் வெயிலின் கொடுமையினின்றும், தற்காத்துக் கொள்ள எலும்பு தேவை. எலும்பிருந்தால் தற்காத்துக் கொள்வது மட்டுமின்றிக் கதிரவனின் ஒளி கொண்டு வாழவும் முடியும்.

அநீதியை நீக்கி நீதியை நிலை நிறுத்துவது அறம். துன்பத்தை நீக்கி இன்பத்தை நிலைபெறச் செய்வது அறம். அறத்திற்கு விலை அன்பேயாகும். அன்புடையோருக்கு அறம் தென்றல்! அன்பில்லாதவர்களுக்கு அது வருத்தும் வாடை - துன்பப் புயல்! ஏன்? அன்பின் விளைவு அறம். அன்பின் பயன் அறம். அன்பு பண்பு, அறம் பயன்! இன்பத்தின் தாய் அன்பு. அன்பில்லாமல் மனித குலத்திற்குத் தீமை செய்து வாழ்பவனை அறக் கடவுள் வருத்தும். இதிகாச உலகில் இராவணனும், பெளராணிய உலகில் பத்மாசுரனும்,