பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அரசியல் உலகில் ஜார் மன்னனும் இதற்கு எடுத்துக் காட்டாவர்.

வெய்யிலின் காய்ச்சலிலிருந்து ஒரோவழி தப்பித்துக் கொள்ள முடியும். வெளியில் தலைகாட்டாமல் மண்ணிற்கு உள்ளேயே புழு வாழுமானால் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் அறக்கடவுளின் காட்சியிலிருந்து அன்பில்லாத மனிதன் தப்பித்துக் கொள்ள முடியாது. அறக்கடவுள் எல்லாமாய்-முழுவதுமாய் இலங்குகிறார். அவரது பார்வை ஆழ்ந்தகன்றது. ஆதலால், அன்புடையராக வாழ்தலும், அறக் கடவுளின் கருணையில் வளர்தலும் நமது கடமை.

அன்புடையராக வாழ்தலின் மூலம் தற்காத்துக் கொள்ளுதல் முன்னேறுதல், இன்பத் துய்த்தல், திருவருள் நிலை பெறுதல் ஆகிய பேறுகள் கிடைக்கின்றன. அன்பின்மையால் இவற்றை இழக்கிறோம். அழிவும் ஏற்படுகிறது.

"என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்." (77)

மனிதனும் மரமும்

றண்ட பாலைவனம்!

நீருற்றின் சாயலே இல்லாத நிலப் பரப்பு. அந்தப் பாலைவனத்தில் ஒரு பட்டமரம்! அது தளிர்த்தது!

என்ன திகைக்கிறீர்களா? நாம் சொல்வது வியப்பாக இருக்கிறதா?

ஆம்! மேலே சொன்னவை நடக்கக் கூடாதவை. நடக்க முடியாதவை என்பதற்கு எடுத்துக்காட்டுக்கள்! அது போலவே, அகவாழ்வில் அன்பைப் பேணி வளர்க்காதவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றமில்லை! அவர்கள் செல்வத்தால் செழிக்க முடியாது! புகழால் பீடுநடை போட முடியாது!