பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 247


என்று காட்டி, “அது காமம் வெகுளி மயக்கம் நீங்கினோர் கண்ணே நிகழ்வது” என்றும் பேசுகின்றார்.

நடுவு நிலைமைக் கொள்கையுடையேர் விருப்பு வெறுப்புக்களினின்றும் விடுதலை பெறுதல் வேண்டும். இறைவனும் “வேண்டுதல் வேண்டாமை இலன்" அன்றோ? அவ் இறைவனை வாழ்த்து வணங்குகிறவர்களுக்கும் இக் குணவியல்பு இன்றியமையாததுதானே! நடுவு நிலைமைக் குணம் இல்லார், நல்லவர்களாக இல்லாததோடு மட்டு மின்றித் தீயவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் தீயவர் களாக இருப்பதோடு மட்டுமின்றி மற்றவர்களையும் கெடுத்து அறமில்லாத வழிகளில் செலுத்துவார்கள்.

அரசு அமைச்சின் வழி. அமைச்சு கெட அரசு கெடும். கெட்ட அரசு-கொடுங்கோல் அரசு. கதிரவன் கடுகிக் காய் கின்ற காய்ச்சல் பயிர்களைச் சுடுதல் போன்று மக்களைச் சுடும். ஆதலால், அமைச்சர் நடுவு நிலைமை' உடையோரா யிருத்தல் வேண்டும், இக்கருத்தினைப் பாலைக் கலி,

"நடுவிகந் தொரீஇ நயனில்லான் வினைவாங்கக்
கொடிதூர்ந்த மன்னவன் கோல்போல் ஞாயிறு
கடுகுபு கதிர்மூட்டிக் காய்சினந் தெரிதலின்"

என்று பேசுகிறது.

நியாயம், நியாயமின்மை ஆகியவற்றிற்குக் கருவி நடுவு நிலைமையுணர்வேயாகும். செல்வர்க்கும், வறியர்க்கும் ஒப்ப நியாயம் வழங்குவதே வாழ்வியல் முறை. இதனை,

"முறை தெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந் தவர்க்கும்
இறை தெரியா நேரொக்கல் வேண்டும்”

என்று பழமொழி பேசுகிறது. ஆனால் உலகியலில் இன்று செய்தியை ஆராய்வதற்குப் பதிலாகச் செய்தி யாரால் சொல்லப்படுகிறது என்றே பார்க்கப்பெறுகிறது. மேலும் செய்தியைச் சொல்லுகிறவர்கள் செய்தும். காட்ட