பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாட்டான். நல்ல வார்த்தைகள் பேச மாட்டான். இழித்துப் பேசுதலையும், பழித்துக் கூறுதலையுமே தொழிலாகக் கொள்வான். அதன் காரணமாகப் பகை வளர்ப்பான்; நண்பர்களை இழப்பான். தான் உயர்ந்தவன் என்ற நம்பிக்கை அவனிடத்தில் இருப்பதனால், வளர்ச்சிக்குரிய கூறுபாடுகள் அவனிடம் இரா. அவன் வாழ்க்கையில் மாறுதலும் இருக்காது வளர்ச்சியும் இருக்காது. ஆணவத்தின் பகை அடக்கமுடைமை. அடக்கமுடைமையை அணிகலனாகக் கொண்டவர்களுக்கு ஆணவத்தின் வாசனையே இருக்காது. பணிவும் இன்சொல்லுமே அவர்கள் பால் குடிகொண்டி ருக்கும்.

அடக்கமுடைமை என்பது அச்சத்தினால் பணிந்து செல்லும் கோழைத்தனத்தைக் குறிப்பதன்று. எதிர்த் தாக்குதல் செய்யும் ஆற்றல் இருந்தும், அதனைச் செய்யாமையே அடக்கமுடைமை! 'அறிவு, செல்வம் புகழ் ஆகியவைகள் இல்லாமற் போயினும் அடக்கமுடைமையின் காரணமாக மேற்கண்டவற்றைப் பெறுவதோடன்றிச் சிறப்பாகவும் வாழ முடியும்! ஆனால், மேற்கண்ட எல்லாவற்றையும் பெற்றிருந்தாலும் அடக்கம் இல்லாமற் போனால், அவர் பெற்றிருக்கிற அனைத்திலுமாய சிறப்புக்களையும் இழந்து இழிநிலை எய்துவார். ஆகையால், நற்குணங்களுள் மிகமிகச் சிறந்தது அடக்கம் உடைமை!

அடக்கமுடைமை எல்லோருக்கும் தேவை, எப்பொழுதும் தேவை. அதுவும் எல்லாவிதமான தகுதிப் பாடுகளும் இருக்கின்ற போழ்து, அடக்கமுடையராக இருத்தல் சிறப்பிற்கெல்லாம் சிறப்பு. 'ஒருவனுடைய இயல்பான பண்பை அவனுடைய செல்வம், புகழ், பதவி ஆகிய தகுதிப்பாடுகள் உயர்கின்ற போழ்து காணவேண்டும்' என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. பொதுவாக அறிவினாலும், செல்வத்தினாலும், பதவியினாலும், தவத்தாலும் இன்ன பிறவற்றாலும் செருக்கு தோன்றுவதுண்டு. அறிவினால்