பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யுடையதாக அமைவதே சிறந்தது என்பது திருவள்ளுவர் கருத்து.

திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறிகள் எளியன போலத் தோன்றும். ஆனாலும், உணர்ச்சி வசப்பட்ட மக்களுக்கு அவை அரியவாம். அறிவும் தெளிவும் கொண்ட மனிதர்களுக்குத் திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறிகள் எளியன. திருக்குறள் பொறையுடைமைப் பணபை மிகுதியும் வற்புறுத்துகின்றது. பொறையுடைமைப் பண்புக்கு திருக்குறள் கூறும் உவமை நிலம். நிலம் கொடிய கருவிகளால் தன்னைக் கொத்திக் கிளறிக் கொடுந்துன்பம் இழைப்பாரையும் வீழ்த்தாமல் தாங்குகிறது. தனது மாசற்ற மேனியில், மாசுகளை உண்டாக்கினாலும் பொறுத்தருளி அவர்கட்கும் வாழ்வு தருகிறது. பொறுப்பதோடு மட்டுமின்றி, அத்துன்பங் களையே தன்னுடைய செழிப்புக்கு உரியவைகளாக மாற்றிக் கொண்டு தன் பெருமையை உயர்த்தி வளம் பெருக்கித் தீங்கிழைத்தோருக்கும் உண்ண உணவும் பருக நீரும் தந்து வாழ்விக்கிறது. ஆக, தீங்கு செய்தோரைப் பொறுத்தல், அத் தீங்குகளையே தன்னுடைய வளர்ச்சியின் நிலைக்களன் களாக மாற்றிக் கொண்டு வளர்தல், பொறுத்தலினும் மிஞ்சிய வாழ்விக்கும் பணியினைச் செய்தல் ஆகியவற்றால் நில்த்தின் பெருமை உயர்கிறது. அதுபோலவே, தீங்கு செய்வோரை எதிர்த்து அழித்தல் நலமன்று. அங்ங்ணம் அழித்தால், தீங்கு செய்யப்பட்டார் மட்டும் அழிவதில்லை. தீங்கு செய்தாரின் நல்லியல்பும் கெட்டு - காலப் போக்கில் அவர்தம் செங்குருதி முறிந்து அழிவையும் அணைத்துக்கொள்ள நேரும்.

உலகியல் பரிணாமத் தத்துவப்படி, ஒன்றிலிருந்து பிறிதொன்று தோன்றாது. அழிவிலிருந்து அன்பு தோன்ற முடியாது. - ஆக்கம் தோன்ற முடியாது. அழிவிலிருந்து அழிவே தோன்றும். பகைவரை ஒறுக்கத் தோன்றும் பகையுணர்ச்சி நம்மையும் அழித்தொழிக்கும். அதனாலன்றோ, புராணங்களிலும் கூட அசுரர்களின் அழிவு பேசப்