பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஒரு தனி மனிதன் உருவத்தால், தோற்றத்தால் தனிமனிதனைப் போலக் காட்சியளிக்கிறான். அவன் பருவுடல் தோற்றத்தால் தனி மனிதனே தவிர, உண்மையில், அவன் தனி மனிதனல்லன். ஒரு தனி மனிதனிடத்தில் முக்கியமாக விளங்குவன மனமும் உள்ளமுமேயாம். அதாவது மனச்சாட்சியும், உள்ளத்து உணர்வுமே மனிதனின் வாழ்வில் இன்றியமையாதன. உணர்வோ அறிவோ, ஒழுக்கமோ கூட, தனி மனிதனின் விளைவுகளுமல்ல; படைப்புக்களுமல்ல. அவற்றை அவன் வாழும் மனித சமுதாயத்திலிருந்தே எடுத்துக் கொள்கிறான். உள்ளுணர்வு களை உருவாக்குவதில், ஒரு தனிமனிதன் வாழும் சுற்றம் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றது. திருவள்ளுவர் "மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு இனத்துளதாகும் அறிவு” என்று கூறுகிறார். "குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிகளுக்கு எல்லாம்" என்று கம்பனும் பேசுவான். "ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்” வாழும் ஊரில் வாழ்தல் முப்பையும் தடுக்கும் என்று புறநானூறு பேசும்.

ஒருவன் ஒருவனுக்கு ஒன்றை வழங்க இருக்கிறான். அதை அழுகாறுடையவன் தடுக்கிறான். தடுக்கும் குணம் தன்னலத்தால் மட்டும் வந்து விடுவதில்லை. தன்னலத்தின் நோக்கம், தான் அனுபவிக்க வேண்டும் என்பதாகும். இங்கு அனுபவிக்க வேண்டுமென்று எடுத்துக் கொள்வதில்லை. மற்றவர்களுக்கு வழங்குவதைத்தான் அழுக்கா றுணர்வோடு தடுக்கிறான். அழுக்காற்றுக்கும் அவாவுக்கும் வேறுபாடுண்டு.

அழுக்காறு பிறர் துய்ப்பதைக் கண்டு பொறாதது. எனவே அவன் அனுபவிக்காமல் இருந்தாலும் இருப்பான்; மற்றவர்கள் அனுபவிக்கக் கூடாது என்றே எண்ணுவான். அழுக்காறுடையவன் தன்னையும் உயர்த்திக் கொள்ள மாட்டான். மற்றவர் உயர்வையும் தாழ்த்துவான். இந்த அழுக்காற்றுணர்வு இயல்பாக ஒரு மனிதனிடத்து வந்துவிடுவதில்லை. அவனுடைய குடும்பமும் சூழ்நிலையுமே