பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 265


முறை மாற்றம்

னித குலத்தை அலைத்து வரும் தீமைகளுள் அழுக்காறு தலையாயது, அதுவே முதல் தீமை. அந்தத் தீமையிலிருந்தே பிற தீமைகள் தோன்றுகின்றன. அதனால் அன்றோ, திருவள்ளுவரும் "அழுக்காறு என ஒரு பாவி" என்று வன்மையாகப் பேசுகின்றார். அழுக்காறு எங்கும் தீது; எதிலும் தீது; எப்பொழுதும் தீது. ஆனால் ஒருசிலர் கல்வியில் - நன்மை செய்வதில் - புகழ் வேட்டலில் அழுக்காறு கொள்ளலாம் என்பது போலக் கூறிவருகின்றனர். ஆனால், எத்துறையிலும் அழுக்காறு கொள்ளுதல் தீதே, அதன் பயன் அழிவே. அழுக்காறுடையான் தான் ஒன்றைப் பெற அவாவ மாட்டான். பிறர் பெற்றிருப்பதை அழிக்கவே முயற்சிப்பான். அங்ஙனம், அழிக்க இயலாத போது அவன், பெற்றிருப் போருக்குக் குற்றங்கள் கற்பிப்பான். இந்த உலகை வருத்தும் தீமைகளுள் தீமை அழுக்காறேயாம். அழுக்காற்றைத் தொடர்ந்துதான் அவா பிறக்கிறது; அவாவைத் தொடர்ந்து தான் வெகுளி பிறக்கிறது; வெகுளியைத் தொடர்ந்து இன்னாச்சொல் - பகை முதலியன தோன்றுகின்றன. ஆக்கத்திற்குப் பயன்பட வேண்டிய காலமும், மனித சக்தியும் பயனின்றி அழிவுக்குத் துணை போவதாகி விடுகிறது. ஆதலால், அழுக்காறுடையான் ஒருபோதும் உயரமாட்டான். வறுமொழியாளர் அரங்கில் வாயடைக்கும்போது, உயர்த்திக் காட்டுதலைத் தவிர, வேறு எந்த வகையான உயர்வும் மறந்தும்கூடக் காணமுடியாது. "அழுக்காறுடையான்கண் ஆக்கம் போன்றில்லை” என்று திருக்குறள் தெளிவாக ஐயத்திற்கிடமின்றி ஓதுகிறது.

இங்ஙனம் ஓதிய திருக்குறள் பின்பு, “அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப் படும்" என்று கூறுகிறது. இத் திருக்குறள் புதிர்போல அமைந் துள்ளது. திருவள்ளுவர் வினாவும் எழுப்பாமல், விடையும்