பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நெஞ்சத்தானின் தீய ஆற்றலும், செவ்வியானிடம் உள்ள வலிமையற்ற நற்பண்புகளுமாகும். சமூகத்தில் ஏற்பட்டுள்ள முறைப் பிறழ்ச்சியை மாற்றியமைப்பது அறிஞர் கடன்! அரசின் கடன்! என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிறைமொழி மாந்தராகிய திருவள்ளுவர் ஆணையிட்டது, இன்று உலக அரங்கில் செயற்படுகிறது. அதன் பயனாக நல்லவர்களாகிய உழைப்பாளர்களுக்கு உலகம் உரிய பங்கை -- மரியாதையைத் தரச் சட்டங்கள் இயற்றுகின்றன - நெறிமுறைப்படுத்துகின்றன!

ஆதலால், அவ்விய நெஞ்சத்தான்கண் ஆக்கம் இருத்தல் இயல்புமன்று; அறமுமன்று, முறையுமன்று. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம், அறம் விழைவோரால் வெறுக்கத் தக்கது; மாற்றத்தக்கது. செவ்வியான் கேடு நீதியொடு படாதது; நெறிக்கு இசைவில்லாதது; மாற்ற வேண்டியது; மாற்றப்பட வேண்டியது. அன்றே சமூகநீதி விளங்கி மேன்மையுறும்! இதுவே திருவள்ளுவர் கருத்து!

வெஃகாமை

பொருள் விருப்பமும் வேட்கையும் மனிதனின் இயல்பான உணர்ச்சி, பொருட்பேற்றைத் துறத்தல் அருமையினும் அருமை. இவ்வுலகு பொருளியலாலே நடைபெறுகிறது. அதனாலன்றோ, முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும் என்றார் மாணிக்கவாசகர். பொருள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய சிறந்த வழி உழைப்போடு கூடிய முயற்சியேயாம். அஃதல்லாத வழியில் பொருள் வருதலைப் பொருள் வரவாகக் கருதப்பெற மாட்டாது. அந்தப் பொருளாக்கம் நீடித்தும் இருக்காது; நிலைபெற்றும் இருக்காது. பொருள் தேடுதற்குரிய நேரிய வழியை விட்டுவிட்டுப் பிறர் பொருளை எடுத்துக் கொள்ளும் தீய உணர்வே சாதாரணமாக மக்களிடம் மேலோங்கி