பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 269


நிற்கிறது, இக்குறை ஏழைகளிடமும் உண்டு. செல்வந்தர் களிடமும் உண்டு. ஆதலால், பிறர் பொருளை வௌவக் கருதுதல் ஒழுக்க நெறிப் பட்டதன்று என்று திருக்குறள் பேசுகிறது.

"நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடியொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.” (171)

என்பது திருக்குறள். பிறர் பொருளை வௌவுதல் நடுவு நிலைமையாகிய நன்னெறியைக் கடந்தது என்று கூறுகிறார், திருவள்ளுவர். நடுவு நிலைமை என்பது, எடை காணவேண்டிய பொருள்களையும், எடை காட்டும். கற்களையும் ஒப்பத் தட்டுகளில் இட்டு எடை காண்பது போல ஏற்றத் தாழ்வின்மை. அதுபோல நம்முடைய விருப்பம், உரிமைகள் ஆகியவைகளோடு ஒப்பப் பிறருடைய விருப்பம், உரிமைகள் ஆகியவற்றையும் மதித்துக் கருதுதல் நடுவு நிலைமை ஒழுக்கமுமாகும். பிறருடைய பொருளை வௌவுதல் அல்லது வௌவக் கருதுதல் தவறு என்று வாளா கூறாது, நன்பொருள் என்று அடையிட்டுக் கூறியிருப்பது சிந்தனைக்குரியது. ஒருவர் பெற்றிருப்பதின் காரணமாகவே அது அவருடைய பொருளாகி விடாது. நெறியல்லா நெறி முறைகளில் பிறர் பொருளை அப்பொருளுடையார் வௌவிச் சேர்த்திருப்பாராயின் அஃதெப்படி அவருக்கு உரிமையாகும்? திருடர் கையிலிருக்கும் பொருள்கள் திருடருக்குச் சொந்தமாக மாட்டா. அவற்றை எந்த நேரத்திலும் திரும்பப் பெற உரிமையுண்டு. ஆதலால், ஏழைகளை வஞ்சிக்கும் பிறர் பொருள்களைச் சூழ்ச்சிகளின் வழியாகவும் பெற்ற ஒருவரிடமிருக்கும் பொருள்களை ஒருவர் வௌவக் கருதுதல் தவறென்று வள்ளுவர் கருதுகிறாரோ? காரணம் அப்பொருள் உடையாரிடம் உள்ள பொருளன்று. நல்வழியில் உழைப்பாலும் உயரிய முயற்சிகளாலும் ஒருவர் ஈட்டி வைத்திருக்கும் பொருள்களை வௌவக் கருதுதல் நன்றன்று. காரணம் அவர்களுடைய